நேற்றைய தினம் 6 முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஒன்று  சர்வதேச மகளிர் தினத்திற்காக பெண்களுக்கு வழங்கப்படும் பரிசு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஆறு முடிவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.



  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் (PMUY) பயனாளிகளுக்கு, 14.2 கிலோ சிலிண்டர்  ரூ.300 என்ற இலக்கு மானியத்தை ஆண்டுக்கு 12 முறை பெற மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை பயனாளிகள் இந்த திட்டத்தை பெறலாம் என்றும் இதற்காக  ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தில் மகளிர் பயண்பெறக்கூடும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விகிதம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். மேலும் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.10,371.92 கோடி செலவில் விரிவான தேசிய அளவிலான 'இந்திய AI (செயற்கை நுண்ணறிவு) மிஷன்' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவு  துறையை மேம்படுத்தும் வகையில் இந்திய AI மிஷன் செயல்படும் என்று அமைச்சரவையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2024-25 ஆம் ஆண்டிற்கான சணலுக்கான (ஜூட்) குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.285 ல் இருந்து உயர்த்தி ரூ.5,335 ஆக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில், "இந்த விலை உயர்வு அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட 64.8 சதவீதம் வருமானத்தை உறுதி செய்யும். 2024-25 ஆண்டுக்கான அறிவிக்கப்பட்ட சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலையை, குறைந்தபட்சம் 1.5 மடங்கு அகில இந்திய அளவில் நிர்ணயிக்கும். 2018-19 பட்ஜெட்டில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சராசரி உற்பத்தி செலவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 34 புதிய ALH துருவ் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு 25 ஹெலிகாப்டர்களும், இந்திய கடலோர காவல்படைக்கு ஒன்பது ஹெலிகாப்டர்களும் இந்த திட்டம் மூலம் கூடுதலாக சேர்க்கப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மூலம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க  ரூ.10,037 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 83,000 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.