இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில்  1,00,636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2427-ஆக இருந்தது. பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கொரோனா தொற்று ஒரளவு குறைய காரணம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதால் நாம் பழைய மாதிரி முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்கவில்லை என்றால் மூன்றாவது அலை மிகவும் தீவிரமாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது. 


இந்நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில்,"கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய நோய் தொற்றை நாம் சந்தித்து வருகிறோம். கொரோனாவிற்கு எதிரான இந்திய ஒருங்கிணைந்து போராடி வருகிறது. கொரோனாவை வெல்ல இந்தியா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் சுகாதார கட்டமைப்புகள் சிறப்பாக வளர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருந்தது. அதை எதிர்கொள்ள விமானப்படை, ராணுவம், சுகாதாரத்துறை மிகவும் தீவிரமாக பாடுபட்டது. 




கொரோனாவை வெல்ல நம்மிடம் உள்ள முக்கிய ஆயுதம் தடுப்பூசிதான். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்துதான் பெற்று வந்தது. எனினும் தற்போது இந்தியாவிலேயே இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தடுப்பூசி வெளிநாடுகளில் இறக்குமதி செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.






தற்போது 50 சதவிகிதம் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு தந்து வருகிறது. மற்ற 50 சதவிகிதம் தடுப்பூசிகளை மாநிலங்கள் வாங்கி வருகின்றன. இந்தச் சூழலில் இனி 100 சதவிகித தடுப்பூசிகளையும் மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு தர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.






தனியார் மருத்துவமனைகள் 25 சதவிகித தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு செலுத்தலாம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 8 மாதங்கள் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் நவம்பர் மாதம் வரை நியாய விலை கடைகளில் 80 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படும்” என்று உரையாற்றியுள்ளார்


மேலும்படிக்க: Kendriya Vidyalaya : Thank you Modi Sir-ன்னு ட்வீட் போடுங்க : கே.வி பள்ளிகளுக்கு கட்டளையா?