ஒரு பக்கம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், இந்திய பா.ஜ.க அரசுக்கும் இடையிலான மோதல் அதீத நிலையில் இருக்கிறது; இன்னொரு பக்கம், அதே ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பாராட்டி முடிந்த அளவுக்கு ட்வீட்டுகளைப் பதியுமாறு மத்திய கல்வி அமைச்சகத் தரப்பில் அழுத்தம் தரப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது.
என்னப்பா இது என வியப்பில் மூக்கில் விரலை வைக்காதீர்கள்; அது வேறு இது வேறு என யாராவது வந்து விளக்கம் சொல்லக்கூடும்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்துசெய்ததற்காக, ’மோடி ஐயாவுக்கு நன்றி’(Thank You Modi Sir) எனும் ஹேஷ்டேகில், ட்விட்டரில் காணொலி வடிவில் பாராட்டுச் செய்தியைப் பதியுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கதன் அதிகாரிகள் கூறியுள்ளனர். பெங்களூரு, கொச்சி ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களுக்கும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகவே தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக டெலிகிராஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


ஜூன் முதல் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் கூடி சிபிஎஸ்இ +2 தேர்வை ரத்துசெய்வது என முடிவெடுக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் முழுவதையும் கொண்ட பெங்களூரு மண்டலத்தில் இருக்கும் 51 பள்ளிகளின் முதல்வர்களுக்கு, கடந்த 3-ஆம் தேதி வியாழனன்று மண்டல துணை ஆணையர் ஸ்ரீமாலா சம்பானா, வாட்சாப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், “பெங்களூர் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும்... ‘தேங்க்யூ மோடி சார்’ எனும் ஹேஷ்டேகில் குறைந்தது 5 வீடியோக்களையாவது உருவாக்கி, அதில் பேசும் மாணவர்களையே மறு ட்வீட் செய்யவைத்து இன்று மாலை 4 மணிக்குள் அதை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவும்.” என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதை, மற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் பகிர்ந்துவிடுமாறும் உடனடியாகப் பகிராவிட்டாலும் 5 வீடியோக்களை அனுப்பவாவது செய்யுங்கள்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.


இதேபோல, கேரள மாநிலத்தை உள்ளடக்கும் எர்ணாகுளம் மண்டலத்தில் உள்ள 39 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் வாட்சப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு நாடு முழுவதும் 25 மண்டலங்களும் அவற்றின் கீழ் 1,200 பள்ளிகளும் வெளிநாடுகளில் 3 பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, தி டெலிகிராப் நாளேட்டின் சார்பில் சங்கதனின் ஆணையர் நிதி பாண்டேவுக்கு கடிதம் அனுப்பியும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள அதிகமான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், வாட்சப் தகவல் வந்ததும் அதை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அதைப் பெற்ற ஆசிரியர்களும் சிரமேற்கொண்டு செய்வதைப்போல, அவரவர் வகுப்பின் அதிகாரப்பூர்வ வாட்சப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இதில்லாமல், பல ஆசிரியர்கள் இதை மாணவர்களுக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ட்விட்டரில் இப்படி பதிவுசெய்யுங்கள் என்று தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளின் முதல்வர்களும் இப்படியான ‘தகவல்’ வந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு 12-ஆம் வகுப்பு மாணவரும் ஒரு வீடியோ அல்லது ஒரு டுவீட்டைப் பதியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கே.வி. பள்ளிகளில் சராசரியாக வகுப்புக்கு 40 பேர் எனும் வீதம் இருந்தால், ஒரு பள்ளியில் 2 பிரிவுகள் வீதம் இந்த மண்டலத்தில் 4ஆயிரம் மாணவர்கள்.. அவர்கள் ஒவ்வொருவரும் பிரதமருக்கு நன்றிகூறி ட்வீட் அனுப்பவேண்டும் என்பது உத்தரவு. “இது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைக் குறைத்து மதிப்பிடச்செய்வது ஆகும். இது துரதிர்ஷ்டவசமானது. இதிலிருந்து மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்வார்கள்? இதனால் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையத்தின் மீது என்ன மரியாதையை வைத்திருக்கமுடியும்? “ என கேள்விகளை அடுக்குகிறார் கல்வியாளர் அனிதா ராம்பால்.