கடந்த 15ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். 


ஹைதர்போரா துப்பாக்கிச் சூடு தொடர்பான குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணித் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குப்கார் மக்கள் கூட்டணி கட்சியின் செய்தி தொடர்பாளர், "இக்குற்றம் தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை விரைவுபடுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக குப்கார் மக்கள் கூட்டணித் தலைவர் உமர் அப்துல்லா இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளார்" என்று தெரிவித்தார்.  






கடந்த 15ம் தேதி ஹைதர்போரா பகுதியில் செயல்படும் கால் சென்டர் ஒன்றில் நான்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய ராணுவத்தினர்  நடத்திய  ரகசிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்து போனார்கள். இதில், படுகொலை செய்யப்பட்ட அல்தாஃப் அகமது பட், டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, ஹைதர் (அ) பிலால் பாய் ஆகிய நால்வரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காமால் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்தவாரா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.  


ஆனால், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஜம்மு- காஷ்மீர் அரசு கூற்றை முற்றிலுமாக மறுத்து வருகின்றனர். டாக்டர் முதாசீர் குல், அமீர் மேக்ரே, அல்தாஃப் அகமது பட் ஆகியோர் மூவருக்கும்  தீவிரவாத குழுவினருக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் தொடர்ந்து தெரிவிக்கின்றனர். மேலும், உடல்களைத் திருப்பித் தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து மூன்று நாட்களாக தொடர் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கருதியும், போராடுபவர்களை கலககாரர்களாக மதிப்பிட்டும் ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. 


இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார், " கட்டடத்தின் உரிமையாளர் அல்தாஃப் அகமது துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், மற்றவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.    


மரணமடைந்த அல்தாஃப் அகமது மகளின் உருக்கமான வீடியோ பதிவு கேட்போர் அனைவரின் மனதையும் கலங்கடிக்கும் வகையில் உள்ளது. " அப்பாவின் இந்த கொடூரமான மறைவை என் சகோதரனுக்கு எப்படி விளக்க முடியும். என்னை விட மிகவும் இளையவன். அப்பாவிடம் அளவற்ற பற்றுக் கொண்டவனாய்  இருந்து வந்தான்" என்று தெரிவித்டார். 


விசாரணைக்கு உத்தரவு: 


இந்நிலையில், இக்குற்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.






 


இதுகுறித்து அவர் விடுத்துள்ள  ட்விட்டர் பதிவில், "ஹைதர்போரா விவகாரம் தொடர்பாக கூடுதல் மாவட்ட நீதிபதி (Additional District Magistrate) அலுவலர் விசராணை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. உரிய நேரத்தில் சமர்பிக்கப்படும் அறிக்கை அடிப்படையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அப்பாவி மக்களின் வாழ்க்கை பாதுகாக்க ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.