பாம்பு மாலை மாற்றி திருமணம் செய்து பகீர் கிளப்பியுள்ளனது மகாராஷ்டிராவைச் சேர்ந்த திருமண ஜோடி ஒன்று. திருமணங்களை வித்தியாசமாக, விந்தையாக, வியக்கவைக்கும் வகையில் எல்லாம் செய்து கொள்வதில் வெளிநாட்டவருக்கு ஈடு அவர்களே. 


ஆனால் அதற்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காதல் ஜோடி தங்களின் திருமணத்தை பாம்பு மாலை மாற்றி முடித்துள்ளனர். மணமகன் சித்தார்த், மணமகள் ஸ்ருஷ்டி இருவருமே மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே வனத்துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.


நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய... 


நடிகர் வடிவேலுவின் காமெடி வசனங்களை வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். அப்படித் தான் இந்த திருமணமும் நடந்துள்ளது. திருமணத்தில் மாலை மாற்றலாம், மோதிரம் மாற்றலாம். இரு இதயங்கள் ஓரிதயமாக்க எதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த ஜோடி பாம்பை மாலைபோல் கழுத்தில் போட்டு திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் 2010ல் நடந்துள்ளது. வீடியோ என்னவோ இப்போது வைரலாகி வருகிறது. முதலில் மணப்பெண் பாம்பு மாலையை மணமகன் கழுத்தில் போடுகிறார். பின்னர் மணமகன் ராஜநாக பாம்பை மணமகளின் கழுத்தில் போடுகிறார். திருமணத்திற்கு பின் பாம்புகள் வனத்துக்குள் விடப்பட்டனவாம். இருப்பினும் அந்தக் காட்சிகள் பார்ப்பதற்கே பகீர் என்ற உணர்வை உருவாக்குகிறது. நம்ம வடிவேலு பாணியில் சொல்ல வேண்டும் என்றால், நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய என்று சொல்லும் அளவுக்கு அந்த வீடியோ உள்ளது.






விநோத சடங்குகள்:
ச்சை நம்மூர்ல தான் இப்படியெல்லாம் பண்ணுவாங்க என்று பொதுமைப்படுத்த வேண்டாம். சில வெளிநாட்டு சடங்குகளைக் கேட்டால் இன்னுமே கழுவி ஊற்ற நேரிடும். பிரான்ஸில் மணமக்களுக்கு விருந்தில் மீதமான உணவுகளைக் கொண்டு ஒரு கசாயம் செய்து தருகின்றனர். அதேபோல் தென் கொரியாவில் மணமகனின் காலில் மணமகள் செத்த மீனால் அடிக்க வேண்டும். இது அவரை முதலிரவுக்கு தயார்படுத்தும் சடங்காம். 


இவற்றையெல்லாம் படிக்கும்போது பாம்பு மாலையே தேவலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை தானே. திருமணங்கள் இருமனங்கள் இணையும் வைபவம் என்பதை உலகம் புரிந்து கொள்ளும்வரை பகட்டும், பந்தாவும், முட்டாள்தனங்களும் இவ்வாறாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.