சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த விசிலை விழுங்கிய 12 வயது சிறுவனை சிவாலான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி உயிரைக் காப்பாற்றியுள்ளனர் கொல்கத்தா மருத்துவர்கள்.
நவீன நவநாகரிக காலத்தில் குழந்தைகளின் நொறுக்குத் தீனி பழக்கங்களும் மாறிவிட்டன. வீட்டில் சுட்ட வடையை, இனிப்பு பதார்த்தங்களையும் உவ்வே.. வகையறாவுக்கு தள்ளிவிட்ட குழந்தைகள் கண்கவர் பிளாஸ்டிக் காகிகதங்களில் வரும் திண்பண்டங்களையே விரும்புகின்றனர். அதன் விளைவு உடல்நலனில் பல்வேறு பாதிப்புகளாக உருவெடுத்தாலும் கூட திருந்துவோர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.
பாக்கெட்டுக்குள் இருக்கும் உணவே ஒரு பூதம் என்றால் அத்துடன் வரும் இலவசமான விளையாட்டுப் பொருட்கள் இன்னும் ஆபத்தானதாக மாறிவிடுகின்றன.
அப்படித்தான் சிப்ஸுடன் பாக்கெட்டுக்குள் இருந்த குட்டி விசிஅலை 12 வயது சிறுவன் ஒருவர் தவறுதலாக விழுங்கிவிட அது அறுவை சிகிச்சைக்குக் கொண்டுவந்துவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் சவுத் 24 பர்கானா மாவட்டத்தின் பருயீபூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ரைஹான் லஷ்கர். 12 வயது சிறுவனான லஷ்கர் கடந்த ஜனவரி மாதம் உருளை சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பாக்கெட்டில் இருந்த விசிலை விழுங்கியுள்ளான். அதன் பின்னர் எப்போது சிறுவன வாயைத் திறந்து பேசினாலும் கூடவே ஒரு மெல்லிய கீச்சு சத்தமும் வந்துள்ளது. ஆரம்பத்தில் அதைப் பெற்றோரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், ஒருமுறை சிறுவன் குளத்தில் குளிக்க முயல, அவனால் வழக்கம்போல் நீந்த முடியாமல் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை பெற்றோர் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனது நுரையீரலில் விசில் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கிருந்து நேஷனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கே சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறிவிட்டனர். திரும்பவும் ஊருக்கே வந்த அவர்கள், மகனுக்கு உபாதைகள் மோசமடைய உள்ளூர் மருத்துவரை நாடினர். அவரோ, இதற்கு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் தான் தீர்வு கிட்டும் எனக் கூற மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஆட்டோரினோலேரிங்காலஜி மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே சிறுவனை மருத்துவர் பேராசிரியர் அருணபா சென்குப்தா பரிசோதனை செய்தார். அங்கே சிறுவனுக்கு எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ப்ரான்கோஸ்கோபி மூலம் ஆப்டிக்கல் ஃபோர்செப் பயன்படுத்தி சிறுவனின் நுரையீரலில் சிக்கிக் கொண்ட விசிலை அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கூட கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளிடம் பாக்கெட் உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்த செய்தியையே ஓர் உதாரணமாக எடுத்துக் கூறலாம்.