இந்தியாவை மீண்டும் தன் பிடியில் வைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் இரண்டாம் அலையால் மாநில அரசுகள் செய்வதறியாது நிற்கின்றன. அரசுக்கு மேலும் ஒரு சவாலாய் முன் நிற்கிறது ஆக்சிஜன் தட்டுப்பாடு. உயிர் மூச்சுக்கு ஆக்சிஜன் இன்றி மனித உயிர்கள் பலியாகின்றன. இந்த நேரத்தில் ஆக்சிஜனை அள்ளி அள்ளி வழங்கும் இயற்கையை மனிதர்கள் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டுமென்கிறது நாக்பூர் மருத்துவமனை. 






ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி பின்னர் ஆக்சிஜன் கிடைத்து உயிர் பிழைத்தவர்களின்  மனதில் ஆக்சிஜனின் தேவையையும், மரங்களின் அத்தியாவசத்தையும் உணர்த்தியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். ஐசியூவில் இருந்து குணமடைந்து வீடு செல்லும் நோயாளியின் டிஸ்சார்ச் சம்மரியில், '' நீங்கள் உயிர் பிழைக்க சுமாராக 1 லட்சத்து 44 ஆயிரம்  லிட்டர் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட ஆக்சிஜனை உலகத்திற்கு திருப்பித் தரவேண்டும். அதற்காக நீங்கள் 10 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். என அன்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதனை ஏற்றுக்கொண்டுள்ள 41 வயதான பெண்மணி, தான் நிச்சயம் மரம் வளர்ப்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'நான் இந்த வருடம் நிச்சயம் 10 மரங்களை நட்டு பராமரிப்பேன். ஆக்சிஜன் எந்த அளவுக்கு முக்கியாமனது என்பதை கொரோனா எனக்கு உணர்த்திவிட்டது. அந்த ஆக்சிஜனை மரங்கள் இலவசமாகவே தருகின்றன என்கிறார் பூரிப்பாக.


கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டுக்குச் செல்லும் அனைவரின் மனதிலும் மரத்தின் அத்தியாவசத்தை பதிய செய்கிறது மருத்துவமனை நிர்வாகம். மருத்துவமனையின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.