சபரிமலை வரும் பக்தர்களுக்கு விரைவில் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தான். நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதமும் சில தினங்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் ஆன்லைன் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபரிமலையில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான தலைவர் பிரசாந்த், “சபரிமலை வரும் பக்தர்களுக்கு கோயிலில் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களிடம் காப்பீடு திட்டத்துக்காக தலா ரூ.10 வசூலிக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.
இதற்காக காப்பீடு நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்பட்டு இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும். சீசன் காலங்களில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களும், மற்ற நாட்களில் 50 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமது வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இந்த புதிய காப்பீட்டு திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார். இந்த தகவல் சபரிமலை பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மேலும் படிக்க: Tamilisai Soundararajan: "நிச்சயமாக சொல்கிறேன்! ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்" - தமிழிசை சௌந்தரராஜன்