அமெரிக்காவில்  பணியாற்றும் வெளிநாட்டவர்கள் தங்களது எச்1பி ( H-1B visa )விசாவை புதுப்பிக்க, இனி தங்களது சொந்த நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.


எச்1பி விசா:


அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்ககி வருகிறது.  அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள, இந்தியா உள்ளிட்ட  வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதி தான் எச்1பி விசா. இதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல. ஒருவேளை எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றினால், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.


புதுப்பிக்கும் வழிமுறை:


ஆனால், முதல் 3 ஆண்டுகள் பூர்த்தியாக எச்1பி விசா காலாவதியாகிவிட்டால் பயனாளர்கள்  அதனை புதுப்பிக்க வேண்டும். அதன்படி,  பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் எச்1பி விசா புதுப்பிக்கப்பட்ட தேதியை "ஸ்டாம்பிங்" (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை. 


பயனாளர்கள் கோரிக்கை:


அதன்படி, பயானளர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில்  வேலைநீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி மீண்டும் எச்1பி விசாவை புதுப்பிக்க வேண்டும்.
இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு அதிகப்படியான மற்றும் அநாவசியமான நேரம் மற்றும் பொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என,  அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.


எச்1பி விசா அப்டேட்டிற்கு புதிய வழிமுறை:


இந்த சூழலில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், எச்1பி விசா தொடர்பான ஒரு நம்பிக்கையான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற புதிய வழிமுறை கொண்டு வரவிருப்பதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், இத்திட்டத்தை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்தாமல், சோதனை முறையில் சிறிய அளவில் முதலில் ஒரு சில பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டதும், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொருட்செலவு மிச்சம்:


இதுதொடர்பாக பேசியுள்ள அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த முத்த அதிகாரி ஒருவர்,அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் சமூகமாக மாறும் சூழலில் இந்தியர்கள் உள்ளனர்.  கடந்த ஆண்டு இந்திய மாணவர்கள் 1 லட்சத்து 25 ஆய்ரம் பேருக்கு எச்1பி விசா விசா வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும். இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 20 சதவீத அதிகமாகும்” என கூறியுள்ளார். எச்1பி விசாவை புதுப்பிக்கும் புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் நபர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவும், அநாவசிய நேர விரயமும் மிச்சமாகும் என நம்பப்படுகிறது.