கடந்த ஆண்டு, மே 5 ஆம் தேதி மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் மற்றொரு மல்யுத்த வீரரான 23 வயதுடைய சாகர் ராணா இருவருக்கும் டெல்லியிலுள்ள சத்ராஸல் விளையாட்டு அரங்கின் கார் பார்க்கிங்கில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சாகர் ராணாவை சுஷில் குமாரும் அவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கினர்.
இதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக மல்யுத்த வீரரை கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். மேலும், சக மல்யுத்த வீரர்களை மிரட்டி தாக்குதல் நடத்தியதை சுஷில்குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்திருந்தனர்.
அதில், மல்யுத்த வீரர் சுஷிலும் அவரது நண்பர்கள் 3 பேரும் சாகரை சுற்றி நிற்கின்றனர். தாக்குதலால் நிலைகுலைந்த சாகர் தரையில் விழுந்து கிடக்கிறார். சுஷில் குமார் கையில் கட்டையுடன் நிற்கிறார், இது அனைத்துமே இடம்பெற்றுள்ள அந்த வீடியோ பதிவு இவ்வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அவரை கைது செய்த டெல்லி போலீஸ் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், கொலை, கொலை முயற்சி, கலவரம், சட்ட விரோதமாக கூடியது, சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ரோகினி நீதிமன்றம் தப்பி ஓடிய இரு குற்றவாளிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஏறக்குறைய மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்த சுஷில் குமார், டெல்லியின் முண்ட்கா பகுதியைச் சேர்ந்த சக குற்றவாளி அஜய்யுடன் கைது செய்யப்பட்டார்.
டெல்லி காவல்துறை தாக்கல் செய்த நிலை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டதும் ஹரியானா மற்றும் டெல்லியின் பயங்கர குற்றவாளிகள் உள்பட சக குற்றவாளிகளுடன் சேர்ந்த சதி செய்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை கடத்த ஆயுதங்கள் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மே 18 ஆம் தேதி, சுஷில் குமார் டெல்லி ரோகினி நீதிமன்றத்தை அணுகி, தனக்கு எதிரான வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், தனக்கு எதிரான விசாரணை ஒரு தலை பட்சமாக நடத்தப்பட்டதாகவும் கூறி முன் ஜாமீன் கோரியிருந்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட காயம் தன்னால் ஏற்படவில்லை என்றும் முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.