கையில் பணத்தையே பார்க்காமல் வழக்கமான வாழ்க்கையை ஓட வைத்திருக்கிறது UPI. போன்ஃபே, கூகுள் பே, பேடிஎம் என பல பரிவர்த்தணை ஆப்கள் செல்போனில் வந்ததில் இருந்து பெரும்பாலானவர்கள் ஏடிஎம் பக்கம் அதிகம் போவதில்லை. டீக்கடை முதல் இளநீர் கடை வரை UPIஐ நம்பி செல்கின்றனர் வாடிக்கையாளர்கள். சில நேரங்களில் சொதப்பலில் முடிந்தாலும் இதுமாதிரியான UPI ஆப்கள் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு தேவையான ஒன்று. 


நாளுக்குநாள் அதிகரிக்கும் வாடிக்கையாளர்களை கவர இந்த UPIஆப்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என பல கவர்ச்சியான விஷயங்களை அள்ளி வீசி வருகிறது. இப்படி கம்பெனிகளுக்கு நடுவே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் நொய்டாவில் போன்பேவுக்கு சொந்தமான QR கோட்களை சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக உடனடியாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளது போன்பே.






இதுகுறித்து புகாரளித்துள்ள போன்பே, பேடிஎம் ஊழியர்களான மூன்று பேர் இப்படியான வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மூவரில் ஒருவர் போன்பேயின் முன்னாள் ஊழியர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.


இதுகுறித்து பேசிய பேடிஎம் செய்தித்தொடர்பாளர், இது போன்பேவுக்கும், அவர்களின் முன்னாள் ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சனையாக தெரிகிறது. ஆனாலும் இந்த சம்பவத்துக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடக்கிறது. எந்தவொரு தவறான நடத்தையையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எப்போதும் பணி நெறிமுறைகளில் ஒழுக்கத்தையே விரும்புகிறோம். Paytm நாட்டில் QR குறியீடு பணம் செலுத்துவதில் முன்னோடியான நிறுவனம். டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நிறுவனம் என்றார்.


போன்ஃபேயின் வளர்ச்சியை பொறுக்காமல் முன்னாள் ஊழியர்கள் இப்படி செய்திருக்கலாம். இது குறித்து போலீசார் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என போன்பே குறிப்பிட்டுள்ளது. 


இந்தியாவில் 32மில்லியன் பேர் PhonePe-இன் QR குறியீடுகளை பயன்படுத்தும் வணிகர்களாக உள்ளனர். 2022ன் படி பேடிஎம்மை பொறுத்தவரை 26.7 மில்லியன் வணிகர்கள் அந்நிறுவன  QR குறியீடுகளை பயன்படுத்துகின்றனர்.