யுபிஎஸ்சி மெயின் எழுத்துத் தேர்வில் தத்துவம் சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளை அடுத்து, சமூக வலைதளங்களில் மீம்கள் தெறிக்க விடப்பட்டு வருகின்றன. 


2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி மெயின் தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஜன.7) நடைபெற்றது. இதில் விரிவாக எழுதும் வகையிலான கட்டுரைக்கான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 


அதில் 3 மணி நேரத்தில் எழுதும் வகையில், மொத்தம் 250 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக செக்‌ஷன் ஏ, செக்‌ஷன் பி என இரண்டு பிரிவுகளில் தலா 4 கேள்விகள் என்ற வகையில், மொத்தம் 8 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் தத்துவம் சார்ந்த கேள்விகள் அதிக அளவில் இருந்தன. 


அதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 1 கேள்வி என 2 கேள்விகளுக்குக் கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டும். கட்டுரைகள் ஒவ்வொன்றும் 1000 முதல் 1,200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், அந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்த விதம் அதிகம் கவனம் ஈர்த்தது. 


குறிப்பாக, இந்த ஆண்டுக்கான கேள்விகள் பெரும்பாலும் தத்துவம் சார்ந்தே அமைந்திருந்தன. இதன்மூலம், வழக்கமாகத் தேர்வர்கள் தயாராகும் முறையில் இருந்து வேறுபட்டுப் புதிய முறையில் கேள்விகள் இருந்தன. இதன்மூலம் தேர்வர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளல், விவரித்து எழுதும் திறன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய நேர மேலாண்மை ஆகியவற்றை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீர்மானிக்கத் திட்டமிட்டது. 


ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளும் இந்தக் கேள்விகள் குறித்துத் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.