உ.பி பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தாவை முதியவர் ஒருவர் அறைந்ததாக உலா வரும் வீடியோ தான் அங்கு அரசியல் களத்தில் இப்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்.
உத்தரப்பிரதேச தேர்தலை ஒட்டி மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதனால் அன்றாடம் அரசியல் செய்திகளுக்கு பஞ்சமில்லை என்றளவுக்கு களை கட்டுகிறது. அந்த வகையில் லேட்டஸ்டாக ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் உ.பி. பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது கன்னத்தில் விவசாயி ஒருவர் பளார் என அறைவிட்டதாக வீடியோ ஒன்று வைரலானது.
இது போதாதா வாய்ப்பை லபக்கென்று கவ்விக்கொண்ட சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "இந்த அறை பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா மீதான தனிப்பட்ட வெறுப்பினால் விழுந்த அறை அல்ல. இது யோகி ஆதித்யநாத் அரசின் மீது விழுந்த அறை. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கைகள், மோசமான நிர்வாகம் மற்றும் அவரின் சர்வாதிகாரப் போக்கிற்கு விழுந்த அறை" என்று கூறி அரசியல் செய்து வருகிறார்.
அந்த வீடியோவில் அப்படி என்ன தான் இருந்தது எனக் கேட்பவர்களுக்காக.. உன்னாவோ தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா மூன்று தினங்களுக்கு முன்னர் சிலைத் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் எம்.எல்.ஏ நின்றிருந்த போது ஒரு முதியவர் மேடைக்கு வருகிறார். அவர், எம்.எல்.ஏ முகத்தில் அறைகிறார். அதைப் பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அந்த முதியவரைப் பிடிகின்றனர். அந்த நபர் எதற்காக அப்படிச் செய்தார் எனத் தெரியவில்லை. அவர் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி என்பது மட்டுமே தெரியவந்தது. இந்நிலையில் பிரச்சினை அரசியல் வட்டாரத்தில் பெரிதாக, கட்சிக்குக் களங்கம் ஏற்படுமே என்று பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா ஒரு விளக்கமளித்துள்ளார். அந்த ட்வீட்டும் இப்போது பாஜகவினரால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த ட்வீட்டில் எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா, அந்த நபர் எனது தந்தை போன்றவர். நாங்கள் கட்சிக்காக ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம். அவர் என்னைச் செல்லமாக கன்னத்தில் தட்டினாரே தவிர அறையவில்லை. எதிர்க்கட்சியினர் எடிட் செய்த வீடியோவை உலவ விடுகின்றனர். அது போன்று எதுவும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆனாலும் சர்ச்சைகள் அடங்கவில்லை. அதனால் எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா ஒரு முடிவு எடுத்தார். அந்த விவசாயியை அழைத்து வந்து பிரஸ் மீட்டில் அமர்த்தினார்.
நிருபர்கள் கேள்வி எழுப்ப, அந்த முதியவர் நான் கையை அசைத்துக் கொண்டிருந்தேன். அது எதிர்பாராத விதமான எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா முகத்தில் பட்டுவிட்டது. அதை நான் அவரை அடித்ததாக சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று கூறினார்.
இதெல்லாம் நம்பும்படியாக இல்லை மை சன் என எதிர்க்கட்சிகள் இன்னும் தான் வறுத்தெடுக்கின்றன. அடுத்தது வரும் வரை இது ஓடும் என்பதில் ஐயமில்லை.