கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.    



 


 


இது தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அரசின் தேசிய பாதுகாப்பு செயலாளர் Delfin  Lorenzana வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கொள்முதல் பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரி என்ற முறையில், 374,962,800 அமெரிக்க டலர் மாதிப்பில், கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை கையகப்படுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பில் கையெழுத்திட்டேன்.  மூன்று பேட்டரிகள், ஆபரேட்டர்கள்,பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி,  தேவையான ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு (ILS) தொகுப்பு ஆகியவை இதில் அடங்கும்" என்று தெரிவித்துள்ளார். 


பிரம்மோஸ் ஏவுகணை:       


இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இந்த, ஏவுகணையை இந்தியாவில் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்தாண்டு பிலிப்பைன்ஸ் அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம், இந்த பாதுகாப்புத் துறையில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். 


உலகின் பாதுப்பாப்புப் பொருட்களின் பெரிய இறக்குமதியாளர் என்ற பிம்பத்தில் இருந்து, பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் தன்னிறைவு பெறுவதற்கான முதல்கட்ட படியாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. 


 


                               


முதலில், இந்த ஏவுகணையின் முழு தொலை இலக்கு 290 கிலோமீட்டராக வடிமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா கையெழுத்திட்ட பிறகு, அதன் முழு தொலை இலக்கு 450முதல் 600 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டது.  


மேலும், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நட்பு நாடுகளும் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறந்ததொரு கட்டத்தை எட்டியிருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


சோதனை: 


முன்னதாக, டிசம்பர் 8,2021 அன்று  வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை ஒடிசா சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பகுதியிலிருந்து சுகோய் 30 எம்கே-I சூப்பர் சானிக் போர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. 2020, அக்டோபர் 18 அன்று  ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து மேற்கொள்ளப் பட்ட சோதனையில் அரபிக்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது


2021 டிசம்பர் மாதம், உத்தர பிரதேச மாநிலத்தில் பிரம்மோஸ் தயாரிப்பு மையத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் கூட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த மையம், நவீன தொழில்நுட்பத்துடன் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. அடுத்த தலைமுறை புதிய பிரம்மோஸ் –என்ஜி ஏவுகணையைத் தயாரிக்கும் வகையில் , அடுத்த இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் இம்மையம் உருவாகி விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ்-என்ஜி  ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறனை இது பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.