ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் கிராமப்புறக் காவல்துறையினர் கடந்த ஜனவரி 14 அன்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தோட்டா சந்திரய்யாவின் கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 13 அன்று, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள குண்டலபாடுவில் தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் தோட்டா சந்திரய்யா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
தன் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கொல்லப்பட்ட பிறகு, அவரின் இறுதிச் சடங்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட பின், இந்தக் கொலை வழக்கு முக்கியத்துவம் பெற்றதோடு, கொலையாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையோரைப் பிடிக்க நான்கு சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நிகழ்ந்த இடமான வேல்டுர்த்தி மண்டல் பகுதியில் உள்ள குண்டலப்பாடு கிராமத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டனர்.
காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்ட தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் தோட்டா சந்திரய்யாவுக்கும் தற்போது இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முதன்மைக் குற்றவாளியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் சிந்தா சிவராமய்யாவுக்கு சாலை கட்டுமான விவகாரம் தொடர்பாக மோதல் நிலவி வந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்டா சந்திரய்யா தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிந்தா சிவராமய்யாவின் உறவினர்கள் அவரிடம் கூறியதாக கைது செய்யப்பட்ட பிறகு சிந்தா சிவராமய்யா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
`தோட்டா சந்திரய்யாவும் அவரது கூட்டாளிகளும் சிந்தா சிவராமய்யாவை தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தால் சிந்தா சிவராமய்யாவும் அவருடன் 7 பேரும் தோட்டா சந்திரய்யாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஜனவரி 13 அன்று அதிகாலை, தோட்டா சந்திரய்யாவைத் தாக்கி, கற்கள், கட்டைகள், கத்தி ஆகியவற்றைக் கொண்டு கொலை செய்துள்ளனர்’ என காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னி தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரின் மீது சட்டப்பிரிவுகள் 302 (கொலை செய்தல்), 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்) ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 14 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாகர்ஜூனா சாகர் பகுதியில் பதுங்கியிருந்தது கண்டிபிடிக்கப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரத்தம் தோய்ந்த உடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குண்டூர் கிராமப்புறப் பகுதியின் காவல் கண்காணிப்பாளர் விஷால் குன்னி, இதுபோன்ற சட்ட ஒழுங்கு விதிமீறல் நிகழ்வுகள் குண்டூர் மாவட்டத்தில் நடந்தால் குற்றம் செய்பவர்கள் மீது எந்த பாரபட்சமும் காட்டப்படாது என எச்சரித்துள்ளார். மேலும் சமூக அமைதியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.