ஆட்சியேற்று இரண்டு வார காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல்,  டீசல் விலைகளைக் குறைக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ளது.


மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்தேறிய பல்வேறு கட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலக, ஏக்நாத் ஷிண்டே தலமையிலான அரசு பொறுப்பேற்றது.


நாளை முதல் குறையும் பெட்ரோல் டீசல் விலை


தன் பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில்,  எரிபொருள் மூதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்படும் என அதிரடியாய் அறிவித்தார்.


இந்நிலையில், தற்போது பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் குறைக்க இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி நாளை (ஜூலை.15) முதல் மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 106 ரூபாயாகவும், டீசல் 94 ரூபாயாகவும் விற்பனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில மக்களின் நலனுக்காக...


பெட்ரோல் விலைக் குறைப்புக்காக இப்பொருள்களின் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மாநிலத்துக்கு ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும் என்றும் எனினும், இந்த வரிக்குறைப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுகுறித்து முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் நலன் கரித்து பாஜக -சிவசேனா தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்


 






வாட் வரியைக் குறைத்த மத்திய அரசு


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 9.5உம், டீசல் விலை ரூபாய்க்கு 7உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்க வேண்டுமென நிர்மலா சீத்தாராமன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிர அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் வரியைக் குறைத்துள்ளது.