பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏன் இத்தனை தாமதம், சிபிஎஸ்இ தூங்குகிறதா என்று மாணவர்களும் பெற்றோர்களும் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். 


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான உளவியல் தேர்வு நடைபெற்றது. 


தேர்வுகள் முடிந்து ஒரு மாதம் முழுதாக நிறைவடைந்த சூழலிலும் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வருகின்றனர்.


ஜூலையில் முக்கிய நுழைவுத் தேர்வுகள்


உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சார்பில் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இவற்றில் சில தேர்வுகளை எழுத பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாததால் இவற்றை எழுத முடியாமல், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 




இதற்கிடையே மத்திய உயர் கல்வி ஆணையாமான யூஜிசி, ''சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில், இரண்டாம் பருவத் தேர்வு முடிவுகள் இன்றும் வெளியாகவில்லை. 2ஆம் பருவத் தேர்வுவிடைத் தாள்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இறுதித் தேர்வு முடிவுகள், இரண்டு பருவத் தேர்வு முடிவுகளையும் சேர்த்து மதிப்பிட்டே வெளியாகும். இந்த நடைமுறை முடிந்து, பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க ஒரு மாத காலம் ஆகும். இதனால் சிபிஎஸ்இ மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும்வரை மாணவர் சேர்க்கைக்கு உரிய அவகாசம் தர வேண்டும்'' என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


'சிபிஎஸ்இ உடனே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்'


மாணவர்கள் இதில் பாதிக்கப்படக்கூடாது என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ''ஏற்கெனவே அறிவித்ததுபோல ஜூலை 18ஆம் தேதி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும். பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ஆண்டு வகுப்புகளும் தொடங்கி நடைபெறும்.


எனினும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தொடங்கும். தமிழக மாணவர்கள் இதில் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. சிபிஎஸ்இ வாரியம் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 




 
இந்த சூழலில், சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தேர்வெழுதித் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் சிலரிடம் ஏபிபி நாடு சார்பில் பேசினேன்.


மன உளைச்சலை ஏற்படுத்துகிறது: மாணவர் சிவராம கிருஷ்ணன்


''ரொம்ப அநியாயம் செய்கிறார்கள். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதம் ஆனால் கூடப் பரவாயில்லை. ஆனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளையும் தாமதம் ஆக்குகிறார்கள். பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. நுழைவுத் தேர்வு மூலமாகப் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டாலும், முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளது. 


சிபிஎஸ்இ ஏன் இப்படிச் செய்கிறது என்றே தெரியவில்லை. நான் 10ஆம் வகுப்புப் படிக்கும்போது, 20 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. ஆனால் இப்போது பிளஸ் 2 தேர்வு முடிந்து, ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 


10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளிவர தாமதம் என்றால் பெரிதாகக் கவலைப்படத் தேவை இருக்காது. அப்போதெல்லாம் விடுமுறை நீட்டிக்கப்படும் என்று ஜாலியாக இருக்கும். ஆனால் இப்போது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்விக்குப் போக வேண்டிய தேவை இருப்பதால், பதற்றமாக உள்ளது. 
எனினும் காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை. கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன்''. 


 



சிவராம கிருஷ்ணன்


பெயர் வெளியிட விரும்பாத மாணவர்


''50 மதிப்பெண்களுக்கான விடைகளைக் கூடத் திருத்தி முடிக்க முடியாமல், சிபிஎஸ்இ தூங்குகிறதா என்று தெரியவில்லை. கொரோனா காரணமாக 2 பருவத் தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இப்போது 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு எழுதி இருந்தோம். 


ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் 40 மதிப்பெண்களுக்கும் (செய்முறைத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள்)  இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தலா 35 மதிப்பெண்களுக்கும்  (செய்முறைத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள், அக மதிப்பீட்டுக்கு 5 மதிப்பெண்கள்) தேர்வை எழுதினோம். 


வாதத்துக்கு எடுத்துக் கொண்டால்கூட 80 மதிப்பெண்களுக்கான விடைத்தாளைத் திருத்துவதைக்கூட பெரிய நடைமுறை எனலாம். அப்போது கூட இத்தனை தாமதம் ஏற்படவில்லை. இப்போது இவ்வளவு கால அவகாசம் எதற்காக என்று புரியவில்லை''. 


மாநில அரசு அவகாசம் அளிக்கவேண்டும்: சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் 


''தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருகிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதமாகி வரும் சூழலில், மாணவர்களும் பெற்றோர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். மகனை / மகளைக் கல்லூரியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களும் கவலையில் இருக்கின்றனர்.  


தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை மாநில அரசு அவகாசம் அளிக்கவேண்டியது அவசியம். அதேபோல  சிபிஎஸ்இ-யும் தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க வேண்டும்''. 


 



கே.ஆர்.நந்தகுமார்


குமார், பிளஸ் 2 சிபிஎஸ்இ மாணவரின் தந்தை


''மகனை உயர் கல்வியில் சேர்க்க வேண்டும். இதற்காகத் தேர்வு முடிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். ஆனால் முடிவுகள்தான் இன்னும் வந்தபாடில்லை. 


மதிப்பெண்கள் கிடைப்பதைப் பொறுத்து, எந்தக் கல்லூரி என்பதை முடிவு செய்யத் திட்டமிட்டிருந்தோம். அதைப் பொறுத்து, பணத்தைப் புரட்ட வேண்டிய தேவையும் ஏற்படலாம். ஆனால் எவ்வளவு மதிப்பெண்கள், என்ன கட்-ஆஃப் என்பது தெரியாததால், குழப்பத்திலேயே இருக்கிறோம். நேற்றைய யூஜிசி அறிவிப்புக்குப் பிறகு சிபிஎஸ்இ விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தேர்வு முடிவுகளை வெளியிடச் செய்ய வேண்டும்''.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 


பிளஸ் 2-வுக்குப் பிறகான மாணவர்களின் உயர் கல்வி, அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமான ஒன்று. இதையும் மாணவர்களின் காத்திருப்புக்கான பின்னான உளவியலையும் மனதில் வைத்து, சிபிஎஸ்இ செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.