ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டியூஷனுக்கு சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவன் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உயிரிழந்துள்ளார்.  சிறுவன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தததாக சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் அமர்நாத் என்பது தெரிய வந்துள்ளது.


ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, ​​வெங்கி என்ற பெயரை அந்த சிறுவன் சொல்லிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செருகுபள்ளி மண்டலம் (தொகுதி) ராஜவோலு கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.


பத்தாம் வகுப்பு மாணவனின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்:


அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் அமர்நாத், சைக்கிளில் டியூஷன் சென்று கொண்டிருந்தபோது, ​​ரெட்லப்பாலம் அருகே இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.


சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து குண்டூர் ஜிஜிஎச் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடேஷ்வர் ரெட்டியும் இன்னும் சிலரும் சேர்ந்து தன்னை தீ வைத்து எரித்ததாக அந்த சிறுவன் போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கொலைக்கு காரணம் என்ன?


இதுகுறித்து அமர்நாத்தின் தாத்தா ரெட்டையா கூறுகையில், "அமர்நாத்தின் சகோதரிக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுவன்தான் இந்த கொலைக்கு காரணம். தன்னுடைய சகோதரியை துன்புறுத்தி வந்த சிறுவனை அமர்நாத் திட்டியுள்ளான். தன்னுடைய சகோதரி படித்து வந்த கல்லூரிக்கு அருகே அந்த சிறுவன் சுற்றி வந்துள்ளான். இதனால், அமர்நாத் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தி அப்படி எல்லாம் செய்யக்கூடாது என மிரட்டியுள்ளான்" என்றார்.  


இதுகுறித்து பாபட்லா காவல்துறை அதிகாரி வகுல் ஜிண்டால் கூறுகையில், "ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ்வரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி மைனர் என்பதால் கடுமையான போக்ஸோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.


பத்தாம் வகுப்பு படிக்கும்  சிறுவன் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமர்நாத்தின் தாத்தா சொன்னபடி நடந்ததா, இல்லை கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.