பிபர்ஜாய் புயலால் மிகவும் பதிக்கப்பட்ட மாநிலம் குஜராத். இந்த மாநிலத்தில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். முன்னேற்பாடுகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால், பாதிப்புகள் பொருட்சேதத்துடன் முடிந்து விட்டது. மேலும் இருவர் இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும், அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், குஜராத்தின் பர்தா துங்கரில் நான்கு நாட்களுக்கு முன்பு மிகக் கடுமையான புயல் ’பிபர்ஜாய்’ புயலால்  மாநிலம் பாதிக்கப்படுவதற்கு  முன்னர், பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார், அவர் மற்றும் அவரது குழந்தை மாநில காவல்துறையால் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார்.


குஜராத் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் முலு அயர் பெரா ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார்,  அதில், பெண் போலீசார் புதிதாகப் பிறந்த குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியபடி தாயும் பல பெண்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு நடந்து செல்வதைக் காணலாம்.


"சேவை மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய பன்வாட்டின் நிர்வாகம் விழிப்புடன் உள்ளது" என்று மாநில சட்டமன்றத்தில் பன்வாட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரா, வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார்.






குஜராத் காவல்துறை தலைமை இயக்குநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் , வீடியோவை மறு ட்வீட் செய்து, "நீங்கள் #GujaratPolice உடன் இருந்தால், நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று பொருள் என குறிப்பிட்டப்பட்டுள்ளது."


வியாழன் அன்று அதாவது நேற்று, குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடந்ததால் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த புயல் இன்று மாலை ராஜஸ்தானில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்த புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய கடலோர காவல் படையினர் உடன் முப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான முதல் புயல் இதுவே ஆகும். கடற்கரையில் அலைகள் 6 முதல் 14 மீட்டர் உயரம் வரை எழும் என்ற எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.  நேற்று நள்ளிரவு புயல் கரையை கடந்த நிலையில் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.