ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


புதிய குற்றவியல் சட்டங்கள்:


அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். புதிய குற்றவியல் சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


சர்ச்சைக்கு உள்ளான தேசத்துரோக சட்டப்பிரிவுகள் புதிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் அனைத்துக்கும் கடும் தண்டனை வழங்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.


உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு:


இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், பல குறைபாடுகள் இருப்பதாகவும் முரண்பாடுகள் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதனை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.


"புதிய குற்றவியல் சட்டங்கள், கொடூர சட்டப்பிரிவுகளை கொண்டுள்ளது. காவல்துறை அரசை நிறுவுகிறது. இந்திய மக்களின் ஒவ்வொரு அடிப்படை உரிமைகளையும் மீறுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் காலனித்துவ தன்மையுடனும் கொடூரமானவையாக இருக்கிறது என கருதப்பட்டால், பிரிட்டிஷ் காலத்தில் ஒருவரை அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் வைத்திருக்கலாம். 


ஆனால், தற்போது கொண்டு வரப்பட்ட இந்தியச் சட்டங்கள், மிக கடுமையான சட்டப்பிரிவுகளை கொண்டுள்ளது. 15 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை காவலில் வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, காவல்துறை சித்திரவதைக்கு உதவும் ஒரு அதிர்ச்சியூட்டும் விதியாகும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.


ஆனால், நான் காங்கிரஸிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்களும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தீர்கள். ஏன் கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றவில்லை? எங்களை டார்கெட் செய்யவே கும்பல் வன்முறை என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் ஆட்சியில் இருந்தபோது சட்டங்களை உருவாக்க மறந்துவிட்டீர்கள்" என்றார்.