உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது.
கொலிஜியம் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:
கொலிஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், கொலிஜியம் அமைப்பு, வெளிப்படைத்தன்மையற்று இருப்பதாக மத்திய அரசு விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், கொலிஜியம் அமைப்பின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் பதில் அளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ள அவர், "கொலிஜியம் அமைப்பின் செயல்முறையை விமர்சிப்பது மிகவும் எளிதானது. ஆனால், ஒரு நீதிபதியை நியமிக்கும் முன் செய்யப்படும் ஆலோசனையில் முறையான செயல்முறை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த கொலிஜியத்தால் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
மனம் திறந்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்:
கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறுவது சரியாக இருக்காது. அதிக வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். முடிவெடுக்கும் செயல்பாட்டில் சரியான முறை பின்பற்றப்படுகிறது. எச்சரிக்கையுடன் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்து பரிசீலிக்கும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். எனவே, கொலீஜியத்தில் நடக்கும் விவாதங்களை பல்வேறு காரணங்களுக்காக பொது வெளியில் வைக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய பரிசீலனையில் உள்ள நீதிபதிகளை சார்ந்தே எங்களின் விவாதங்கள் இருக்கும்.
இந்த விவாதங்கள், சுதந்திரமான, நேர்மையான சூழ்நிலையில் நடக்க வேண்டும் என்றால், அதை வீடியோ பதிவாக எடுக்க கூடாது. கொலிஜியம் அமைப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்ட அமைப்பு அல்ல. இந்த செயல்முறையை விமர்சிப்பது மிகவும் எளிதானது. ஆனால், இப்போது நான் பல ஆண்டுகளாக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால், ஒரு நீதிபதியை நியமிக்கும் முன் முறையான ஆலோசனையை உறுதி செய்ய எங்கள் நீதிபதிகள் ஒவ்வொரு முயற்சியும் செய்கிறார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
எங்களிடம் நீதிபதிகள் நியமனம் செய்வதற்கான கொலிஜியம் அமைப்பு உள்ளது. அது, இப்போது 1993 முதல் எங்கள் நீதித்துறையின் ஒரு பகுதியாக உள்ளது. அதைத்தான் நாங்கள் செயல்படுத்துகிறோம். கொலிஜியம் அமைப்பின் தற்போதைய உறுப்பினர்களான எங்களின் கடமையும் அதை பராமரித்து இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் ஆக்குவதுதான். அதை மேலும் குறிக்கோளாக மாற்ற மேலும் இது சம்பந்தமாக நாங்கள் நடவடிக்கைகளை, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.