டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் மேற்கொண்ட சர்ச்சைப் பேச்சுகளைக் கண்டித்து அமைதிவழிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் மசூதி நிர்வாகிகளால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். முதலில் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டம் கலைக்கப்பட்ட பிறகு, போராட்டக்காரர்கள் மீண்டும் குழுமியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், தியோபந்த், மொரதாபாத் முதலான பகுதிகளிலும் இதே போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சகரன்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக நடக்க முயன்ற போது, காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தியுள்ளனர். எனினும் போராட்டம் அமைதியான வழியில் நடைபெற்றது.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
முகமது நபி குறித்து குறித்த வெறுப்புப் பேச்சுகள் காரணமாக நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
ஜும்மா மசூதி பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லாததால் அங்கு கூடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய மாவட்டக் காவல்துறை துணை ஆணையர் ஷ்வேதா சௌகான்,` ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்குக்காக சுமார் 1500 பேர் கூடியுள்ளனர். தொழுகை முடிவடைந்த பிறகு, சுமார் 300 பேர் வெளியில் வந்து நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் பேச்சுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். சுமார் 10 முதல் 15 நிமிடங்களில் நிலைமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளோம். அனுமதியின்றி தெருவில் போராட்டம் நடத்தியதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.