இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனையாகி வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் உயர்ந்தது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்து விற்பனையாகி வந்தது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல நாட்களாக குறைக்க சொல்லி எழுந்து வரும் கோரிக்கைகளுக்கு ஒரு வழியாக விடைகிடைத்தது. இந்நிலையில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், வாகன ஓட்டிகள் வெகுவாக மகிழ்ச்சியடைந்தனர். டீசல் விலை குறைப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



வாட் வரியை குறைக்கும் மாநிலங்கள்:


மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் (VAT) குறைத்து வருகின்றன. இதனால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலையும் அதிரடியாகக் குறைகிறது. கேரள மாநிலத்தில் பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி ரூ.2.41 மற்றும் டீசலுக்கான வரி ரூ.1.36 குறைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி ரூ.2.48 மற்றும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி ரூ.1.16 குறைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் வரிகள் முறையே ரூ.2.23 மற்றும் ரூ.1.36 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசின் நிலைப்பாடு


கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன என்பதால், மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு நிகராக மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைத்த அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் உப வரியை மத்திய அரசு உயர்த்தியது என்று நிதியமைச்சர் பிடிஆர் குறிப்பிடுகிறார். எனவே உயர்த்தியவர்கள் தான் குறைக்க வேண்டும் நாங்கள் அல்ல என்று கூறிவிட்டார்.


குஜராத்


இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் விலை 14 ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள பொதுமக்கள் குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. எல்லையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள், குஜராத்தில் படையெடுத்து எரிபொருள் நிரப்பி வருகின்றனர். டீசல் 3 ரூபாய் 50 பைசா குறைவாக கிடைப்பதால் லாரிகளும் அந்த பக்கம் ஒதுங்குகின்றன.