பெகசஸ் உளவு விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகசஸ் எனப்படும் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் உளவுப்பார்க்கப்பட்டதாக கடந்த ஜூலை 18-ஆம் தேதி சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த பெகசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ. குழுமம் “பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம். இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே தருகிறோம் என்றது.
இந்த மென்பொருளை கொண்டு ராகுல்காந்தி, திருமுருகன் காந்தி, சீமான் உள்ளிட்ட பலரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த உளவு மென்பொருளை இந்தியாவின் மாநிலங்களுக்கு எதிராகவும் இந்தியாவின் அரசு அமைப்பு நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த மதசாற்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்ப்பதற்காகவும், ரஃபேல் விமான முறைகேடு தொடர்பாக பிரான்ஸில் உள்ள பத்திரிக்கையாளர்களை உளவு பார்ப்பதற்காகவும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை கண்டித்து மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 19-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை முடக்கி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்து என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 500-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் பெகசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இந்து என்.ராம் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.