பெகசஸ் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் விசாரணையை தொடங்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்தியா இஸ்ரேல் இடையிலான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படாதது என்றும் அதனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு செலவழிக்கப்பட்ட தொகை மீட்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.






குறிப்பிட்ட சில நபரை நீதியின் பெயரால் உளவு பார்ப்பதற்காக பொதுமக்களின் பணத்தைச் செலவு செய்தது குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை எம்.எல்.ஷர்மா என்பவர் தாக்கல் செய்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து முதல்முறையாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவரும் இவர்தான். கடந்த அக்டோபரில் இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான விசாரணைக்குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பெகாசஸ்  மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் 3 பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார். 






மேலும், பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.