இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதியும். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமானவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முறைகேடு வழக்கு ஒன்றில் ஆந்திர அரசால் கைது செய்யப்பட்டார். அவரது கைதால் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு கூட்டணி:
இந்த நிலையில், அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் இன்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திராவில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடைபெற உள்ள ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி அமைக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் பவன்கல்யாண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஆந்திர பிரதேசம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்படக்கூடாது. நான் இன்று ஒரு முடிவு எடுத்துள்ளேன். ஜனசேனா – தெலுங்கு தேசம் வரும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவோம். பவன் கல்யாணின் இந்த அறிவிப்பின்போது, சந்திரபாபு நாயுடுவின் மகனும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான நாராலோகேஷ் மற்றும் பிரபல நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா உடன் இருந்தார்.
சந்திரபாபு நாயுடு கைது:
முன்னதாக, சந்திரபாபு நாயுடு பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ராஜமகேந்திரவர்மம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது, அவரை நேரில் காண வேண்டும் என்று பவன் கல்யாண் சென்றபோது, அவரை அனுமதிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, சாலையிலே படுத்து பவன்கல்யாண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்போது சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு 14 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார். 371 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டுள்ளதால் ஆந்திராவில் பல இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சியினரும், சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர அரசியலில் பரபரப்பு:
பவன்கல்யாண் தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். இந்த நிலையில், இந்த கூட்டணியில் இல்லாத சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது கூட்டணி முடிவு குறித்து பா.ஜ.க. தலைமை இதுவுரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியோருடன் கூட்டணி வைத்தது, அந்த தேர்தலில் சுமார் 17 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் வர உள்ள நிலையில் பவன்கல்யாணின் இந்த அறிவிப்பு ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன்கல்யாணுக்கு தமிழ்நாட்டில் விஜய், அஜித்திற்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதுபோல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Magalir Urimai Thogai: மொபைலும் கையுமா இருங்க! வங்கி கணக்குக்கு வருகிறது ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!
மேலும் படிக்க: புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... 44 பேர் டெங்கு காய்ச்சலால் பதிப்பு... அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சுகாதாரத்துறை