பாடனாவில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற பெண் ஒருவர், மூடப்படாத பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த சம்பவம் விடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் டெக்னாலஜி வளர வளர அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட்ஃபோனில் கவனம் செலுத்திக்கொண்டு சாலைகளில் செல்லுதல், பயணித்தல் ஆகியவை பலரின் உயிரை பறிக்கும் சம்பவங்கள் பல தொடர்ந்து நடைபெறுகின்றன. ஸ்வாரஸ்யமான கண்டெண்ட்டுகள் மூலம் அதற்கு அடிமையாகி எப்போதும் பயன்படுத்தும் மக்கள் பலருக்கு அதுவே ஆபத்தாக அமைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பீகாரில், தொலைபேசியில் பேசிக்கொண்டே பெண் ஒருவர் திறந்திருந்த பாதாள சாக்கடை ஓட்டையில் விழுந்தது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இணையத்தில் வெளியான அந்த விடியோ கிளிப் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் சாலைகளில் சாக்கடைகளை திறந்து வைக்கும் நிர்வாகம் குறித்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
பாட்னாவில் நடந்த இந்த சம்பவத்தில், பெண் ஒருவர் ஆட்டோரிக்ஷாவின் பின்னால் தொலைபேசியில் பேசிக்கொண்டு நடந்து செல்கிறார். நின்றுகொண்டிருந்த அந்த வாகனம் கிளம்பியதும், அதற்கு அடியில் இருந்த பாதாள சாக்கடை திறப்பின் மூடி அகற்றப்பட்டதைக் கவனிக்காமல் அவர் நடக்கிறார். அந்த ஓட்டையில் அவர் கால் வைத்ததும் திடீரென்று உள்ளே வீழ்கிறார். அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூட்டமாக கூடுகிறார்கள். கூடியவர்கள் ஏதேதோ திட்டங்கள் செய்து அந்த பெண்ணை காப்பாற்றிவிட்டதாக அப்பகுதியிலிருந்து செய்திகள் வந்துள்ளன.
நமாமி கங்கா திட்டப்பணிகளுக்காக கடந்த சில மாதங்களில் பல பாதாள சாக்கடைகள் மூடப்படாமல் விடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அதை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் இதுபோன்ற பல விபத்துகளுக்கு வழிவகுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பலர் அந்த பெண் செல்போன் பேசிக்கொண்டு சென்றிருக்க கூடாது என்றும், பெண் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இருப்பினும், திறந்திருக்கும் பாதாள சாக்கடை அருகில் நடந்து செல்பவர்களை எச்சரிக்கும் வகையில் பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதன்முறை அல்ல, மொபைல்ஃபோன்கள் வந்தது முதலே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
சமீபத்தில் இதே போல ஒரு சம்பவம் டெல்லியில் நடந்தது. இந்த வருட ஆரம்பத்தில் ஒரு பயணி தொலைபேசியில் பேசிக்கொண்டே மெட்ரோ ரயில் பாதையில் விழுந்தார். CISF பணியாளர்களின் விரைவான நடவடிக்கையின் மூலம், அந்த நபர் மீட்கப்பட்டு மேலே கொண்டுவரப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.