பாகிஸ்தானுக்குச் சென்று உயர் கல்வி பயின்றால் இந்தியாவில் வேலை கிடையாது என்று உயர் கல்வி அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அதிரடியாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கண்காணிப்பு அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் கூட்டாக நேற்று இரவு அறிக்கையை வெளியிட்டன. அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''பாகிஸ்தானில் உயர் கல்வி படிக்க எந்த மாணவர்களும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியக் குடிமகன்கள் அல்லது இந்தியக் குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் வசிப்போர் பாகிஸ்தான் கல்வி நிறுவனங்களில் உள்ள பட்டப்படிப்புகளை படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது.
எனினும் பாகிஸ்தானில் உயர் கல்வி படித்த அகதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருந்ததால் அவர்களால் இந்தியாவில் வேலை பெற முடியும். எனினும் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
*
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல அண்மையில் ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ இரண்டு முழுநேரப் படிப்புகளைப் படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்தது. இதுகுறித்த விரிவான நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம் என்று மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்