ஊர்ப் பக்கம் போனால்.. ஒரு சொலவடையைக் கேட்கலாம். ஏம்பா ஊசி தங்கத்துல இருந்தா கண்ணுல குத்திக்க முடியுமான்னு பெருசுங்க சொல்வதுண்டு. அந்தக் கதைதான் பிஹார் பாட்டிக்கு நடந்திருக்கு.
கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் பேராயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விதமாக விளம்பரப்படுத்திவரும் நிலையில், இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் இந்த விழிப்புணர்வு வாசகம் சென்று சேர்ந்துவிட்டது.
சாமான்ய மக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இப்படித்தான் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் தடுப்பூசி மையத்துக்குச் சென்றிருக்கிறார். பாட்னாவைச் சேர்ந்த சுனிலா தேவி வயது 63. இவர் கடந்த 16ம் தேதியன்று அருகிலுள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமுக்குச் சென்றுள்ளார். அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓர் அறையிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னொரு அறையிலும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மக்கள் காத்திருந்தனர். சுனிலா தேவி தனக்கான வரிசையில் நின்றுள்ளார்.
அப்போது அவருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தடுப்பூசியைப் போட்டதும் அங்கிருந்த செவிலியர்கள் சுனிலாவை சில நிமிடங்கள் காத்திருந்து ஏதேனும் உபாதை ஏற்படுகிறதா எனப் பரிசோதனை செய்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். 
அவரும் அவர்கள் கூறிய இடத்தில் அமர்ந்திருக்கிறார். அப்போது தனது வயதை ஒத்திருந்தவர்கள் வேறு ஒரு அறை முன்னரும் கூட்டமாக நிற்பதைப் பார்த்திருக்கிறார். அங்கேயும் ஏதும் செய்ய வேண்டும் என எண்ணி அந்த வரிசையில் நின்றிருக்கிறார். ஆனால், ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள நின்ற கூட்டம். தனது முறை வரும்போது செவிலியர் தடுப்பூசி போட முயன்றுள்ளார். அப்போது பாட்டி நான் ஏற்கெனவே போட்டுவிட்டேன் எனக் கூற செவிலியரோ முதல் டோஸைப் பற்றிச் சொல்கிறார் என நினைத்துக் கொண்டு பாட்டிக்கு கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுவிட்டிருக்கிறார்.
இதனால், பாட்டிக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்குவந்த பாட்டி நடந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட தடுப்பூசி மையத்துக்குச் சென்றனர். அங்கு விசாரனை நடத்தியபோது தான் நடந்த குழப்பம் தெரியவந்தது.
இது குறித்து சுகாதாரத் துறைக்குப் புகார் பறக்க சுகாதாரத் துறை அந்த இரண்டு செவிலியருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது பற்றி சுனிலா கூறுகையில், "நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சென்றபோது, அங்கே முதலில் எனக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் ஓர் அறையில் இருக்கச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்த சிலர் மற்றொரு வரிசையில் நின்றனர். நானும் அவர்களுடன் நின்றிருந்தேன். அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் எனக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் எனக்கு தடுப்பூசி போடும் போது, எனக்கு இப்போதுதான் தடுப்பூசி போட்டார்கள் என்று கூறினேன். ஆனால், அந்த செவிலியர் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை இரண்டு தடுப்பூசிகளும் ஒரே கையிலேயே போடப்பட்டது. மிகுந்த வலியும், கடுமையான உடல் சோர்வும் ஏற்பட்டது" என்று கூறினார்.
ஊசி தங்கத்துல இருந்த கண்ணுல குத்திக்க முடியுமான்னு பெருசுங்க சொல்வதுபோல் தடுப்பூசி நல்லதென்றால் இப்படியா காக்டெய்ல் கொடுத்து அனுப்புவாங்க?



வேக்சின் காக்டெயில்:
இங்கு பிஹார் பாட்டிக்கு நடந்தது விபத்து அல்லது அஜாக்கிரதை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் அதாவது இரண்டாவது தடுப்பூசியாக வேறொரு தடுப்பூசியை செலுத்துகிறார்கள். உதாரணத்துக்கு முதல் டோஸ் மாட்ர்னா தடுப்பூசி செலுத்தியிருந்தால் இரண்டாவது டோஸ் ஃபைஸர் செலுத்துகிறார்கள். இதனால், தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும்போது மக்களுக்கு சரியான நேரத்தில் இரண்டாவது டோஸை செலுத்த முடிகிறது எனக் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளில் பரிச்சார்த்த முறையில் இதைப் பயன்படுத்தியதில் உயிர்ச்சேதமில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், அதே வேளையில் இரண்டு டோஸ்களுக்குப் பின்னர் அதிகரித்திருக்கும் ஆன்டிபாடி, பூஸ்டரால் உருவானதா அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியால் (வேக்சின் காக்டெயிலால்) வந்ததா என்பது உறுதிசெய்யப்படவில்லை. இதனாலேயே இங்கு இந்தியாவில் இந்த மாதிரியான விஷப்பரீட்சைகளை மேற்கொள்ளவில்லை. இருப்பினும், அஜாக்கிரதையால் இங்கேயும் ஒரு வேக்சின் காக்டெய்ல் நடந்திருக்கு. என்ன, இங்கே ஒரே நாளில், ஒரு சில நிமிடங்கள் இடைவெளியில் ஏற்கெனவே ஊசி குத்திய கையிலேயே இன்னொரு டோஸையும் போட்டு அனுப்பியிருக்கிறார்கள்.