பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் காலிஸ்தான் ஆதரவு நபர்களுக்கும் சிவசேனா அமைப்பினருக்கும் இன்று மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பட்டியாலா பகுதியில் காலிஸ்தான் ஆதரவு நபர்களுக்கு எதிராக சிவசேனா அமைப்பு சார்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அந்தப் பகுதிக்கு காலிஸ்தான் ஆதரவு நபர்கள் ஆயுதங்களுடன் வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு குவிந்து இருந்த இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன் கற்களை வீசி தாக்கி கொண்டுள்ளனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் இரு தரப்பினரும் ஒருவரை தாக்கி கொள்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்திற்கு அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவித சம்பங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “பட்டியாலாவில் நடைபெற்றது மிகவும் வருந்ததக்க சம்பவம். காவல்துறை டிஜிபியிடம் இதுகுறித்து கேட்டறிந்தேன். அங்கு தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் அமைதியை யாரும் சீர்குலைக்கவிட மாட்டோம். பஞ்சாப் மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியே எங்களுக்கு எப்போதும் முன்னுரிமை” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்