இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது. மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளன.


அதனால் உத்தரப்பிரதேசத்தில் தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சம் ரூ.103 முதல் 105 ரூபாய் வரைதான் உள்ளது. ஆனால், மத்திய அரசின் வார்த்தைக்குச் செவி சாய்க்காத சில மாநிலங்கள், மத்திய அரசின் கோரிக்கையான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்து விற்கிறது. மத்திய அரசின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் குடிமக்களுக்குக் கூடுதல் சுமையை மாநில அரசுகள் சுமத்திவருகின்றன. நான் யாரையும் விமர்சிக்கவில்லை, ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சை, பாஜக அல்லாத மாநில அரசுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.



இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியுடனான உரையாடல் முழுவதுமாக ஒரு சார்பாகவும், தவறான வழிகாட்டுதலாகவும் இருந்தது. அவர் பகிர்ந்த தகவல்கள் எல்லாம் தவறானவை. கடந்த 3 ஆண்டுகளாக 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் மானியமாக கொடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் 1500 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம். பிரதமர் மோடியுடனான உரையாடலில் முதலமைச்சர்களுக்கு பேச வாய்ப்பே வழங்கப்படவில்லை. அதனால் பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.


கொரோனா பாதிப்பு சீராய்வு கூட்டத்தில் பெட்ரோல் விலையைப் பற்றி பேசியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவரது நோக்கம் அது தான். இந்திய அரசு மேற்குவங்க அரசுக்கு ரூபாய் 97,807.91 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது. எங்களுக்கு தரவேண்டியதை கொடுப்பது பற்றி ஏதாவது திட்டம் இருக்கிறதா? நாங்கள் இதை உத்தரவாதமாகவே தருகிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தரவேண்டிய தொகையை திரும்பக் கொடுத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அனைத்து வரிகளில் இருந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விலக்கு தருகிறோம். பிரதமர் அதை கொடுக்கிறாரா பார்ப்போம். அதில் பாதியை கொடுத்தால் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாஜக ஆளும் மாநிலங்களை விட அதிக மானியம் கொடுக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை கொடுக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை அலட்சியப்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.


மத்திய அரசு எங்களுக்கு 26,500 கோடி ரூபாய் தர வேண்டியது இருக்கிறது. மகாராஷ்டிராவை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு மகாராஷ்டிர அரசு எந்த வகையிலும் பொறுப்பாகாது என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.



பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசால் தான் உயர்கிறது. நாங்கள் வாட் வரியை உயர்த்தாத போதும் வரியை குறைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். இதுதான் நீங்கள் பேசும் கூட்டாட்சியா பிரதமர் மோடி அவர்களே? தெலங்கானா கடந்த 2014ம் ஆண்டு முதல் வாட் வரியை உயர்த்தவே இல்லை. உங்கள் அரசு விதித்துள்ள செஸ் வரியால் எங்களின் உரிமையான பங்கில் 41 சதவீதம் எங்களுக்கு கிடைக்கவில்லை. செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களிடமிருந்து 11.4 சதவீதத்தை கொள்ளையடிக்கிறீர்கள். எங்களுக்கு 29.6 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அதனால் செஸ் வரியை  தயவு செய்து நீக்குங்கள். அதனால் பெட்ரோலை 70 ரூபாய்க்கும் டீசலை 60 ரூபாய்க்கும் இந்தியா முழுவதும் விற்கிறோம். ஒரே நாடு. ஒரே விலை. சரியா என்று கூறியிருக்கிறார் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ்.


ஒரு கூட்டாட்சி அமைப்பில், நிதி நிர்வாகத்திற்கு மத்திய அரசு பொறுப்பாக இருக்கும்போது, ​​பல்வேறு காரணங்களுக்காக, பணவீக்கத்திற்கு சில மாநிலங்களை குற்றம் சாட்ட முயற்சிக்கக்கூடாது. சமூக நலனுக்காக கணிசமான தொகையை செலவழிக்கும் ஒரு மாநிலத்தின் தற்போதைய பொருளாதார நிலையை அறிந்த ஆட்சியாளர், எரிபொருள் விலையேற்றம் மற்றும் இதனால் மக்கள் படும் துன்பம் விமர்சிக்கக்கூடாது. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை ஒரு முறை கூட அதிகரிக்காத போது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.


பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் இந்தப் பொருட்களின் மேல் தாங்கள் விதிக்கக்கூடிய வரிகளை மாநில அரசுகள் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல், டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்றும் பிரதமர் நேற்றைக்குக் குறிப்பிட்டுக் பேசியிருந்தார். இதனைப்பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், அவர் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.



2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற்போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படக்கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு.


பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக்கூடிய தலவரியையும் தலமேல்வரியையும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கத் தேவையில்லை என்பதால் இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற காரணத்திற்காக இந்தத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரமே மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது மத்திய அரசு.



ஆனால், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாகவே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழக அரசு. இவையனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதுபோல நடித்து, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார் .


பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்திலும், கூட்டணியில் உள்ள பீகாரிலும் பெட்ரோல் விலை 120 ரூபாயை தொட்டுவிட்ட நிலையில் பாஜக ஆளாத மாநிலங்கங்களை பிரதமர் விமர்சித்துள்ளார். இதனால், அவரை முதலமைச்சர்கள் மட்டுமல்லாது ராகுல்காந்தி உள்பட ஆட்சியில் அல்லாத கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.