உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களது நாடுகளில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வதற்கு பாஸ்போர்ட்டை கட்டாயமாக வைத்துள்ளனர். இந்தியாவிலும் வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் மிகவும் கட்டாயமான ஒன்றாக உள்ளது.


பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, விண்ணப்பித்து பெற உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பராமரிப்பு சேவை காரணமாக நாளை மறுநாள் வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில்  (www.passportindia.gov.in)   தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் அக்டோபர் 4ம் தேதி ( நேற்று) இரவு 8 மணி முதல் வரும் அக்டோபர் 7ம் தேதி ( நாளை மறுநாள்) காலை 6 மணி வரை இயங்காது.






இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு தங்களது நேர ஒதுக்கீடு/ சந்தேகங்களுக்கு பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பராமரிப்பு சேவையால் 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்ற அறிவிப்பால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திங்கட்கிழமை காலை முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் அதற்கேற்றவாறு பயனாளர்கள் தயாராக இருக்குமாறும் பாஸ்போர்ட் சேவை இணையதள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.