Haryana Assembly Elections: ஹரியானாவில் உள்ள 90  சட்டமன்ற தொகுதிகளில், 2 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


ஹரியானா சட்டமன்ற தேர்தல்:


ஹரியானா சட்டமன்ற தேர்தலானது முதலமைச்சர் நயாப் சிங் சைனி, காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் வினேஷ் போகட் மற்றும் ஜேஜேபியின் துஷ்யந்த் சௌதாலா உட்பட 1,031 வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க இரண்டு கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்ப்ட உள்ளன. அதில், தொடர்ந்து மூன்றவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


வேட்பாளர்கள் & வாக்காளர்கள் நிலவரம்:


90 சட்டசபை தொகுதிகளில் 101 பெண்கள் உட்பட 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 464 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். 100 வயதை கடந்த 8,821 பேர் உட்பட 2,03,54,350 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள். 5,24,514 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்களும் அடங்குவர். 115 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களாலும், 87 மாற்றுத்திறனாளி பணியாளர்களாலும், 114 வாக்குச்சாவடிகள் இளைஞர்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன.


நட்சத்திர வேட்பாளர்கள்:


ஹரியானா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஐஎன்எல்டி-பிஎஸ்பி, மற்றும் ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில், தற்போதைய முதலமைச்சர் சைனி (லட்வா), எதிர்க்கட்சித் தலைவர் ஹூடா (கர்ஹி சாம்ப்லா-கிலோய்), ஐஎன்எல்டியின் அபய் சிங் சவுதாலா (எல்லெனாபாத்), ஜேஜேபியின் துஷ்யந்த் சௌதாலா (உச்சான கலன்) மற்றும் சுயேச்சை வேட்பாளரான சாவித்ரி ஜிண்டால் (ஹிசார்) உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் ஒரு சில கிளர்ச்சியாளர்களும் களத்தில் வேட்பாளர்களாக இறங்கியுள்ளனர்.


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக 30,000 காவல்துறையினரும், 225 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பதற்காக மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,460 வாக்குச் சாவடிகள் முக்கியமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 138 வாக்குச் சாவடிகள் ஆபத்து நிறைந்தவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.  இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தலின் போது மாதிரி நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், 507 பறக்கும் படைகள், 464 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 32 விரைவு பதில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,156 ரோந்துக் குழுவினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


2019ம் ஆண்டு தேர்தல் நிலவரம்:


2019 சட்டமன்றத் தேர்தலில் 68 சதவிகிதத வாக்குகள் பதிவானது. அதன் முடிவில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜேஜேபி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.இந்த நிலையில் நடப்பு தேர்தலிலும் மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவும்.