மணிப்பூர் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் நாட்டை உலுக்கி வரும் நிலையில், முதலமைச்சர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசு இயந்திரம் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறி காங்கிரஸ் உள்பட பலர், முதல்வர் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவாரா முதலமைச்சர் பைரன் சிங்?


ஆனால், முதலமைச்சர் பதவியில் பைரன் சிங்கே, தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் மாறாக சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


"மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் இன்று காலை குக்கி குழுக்களுடன் பேசினார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மத்திய அரசு தொடர்ந்து மாநிலத்துடன் தொடர்பில் உள்ளது" என உயர் மட்ட அரசுத் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்களை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.


குற்றவாளிகளுக்கு தூக்கா?


சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க பரிசீலித்து வருவதாக பைரன் சிங் தெரிவித்தார். 


பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம் எதிரொலித்தது.


மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, "மணிப்பூர் அங்கு பற்றி எரிகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்ரனர். ஆனால், பிரதமர் அமைதியாக இருக்கிறார். வெளியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்” என ஆவேசமாக பேசினார். 


இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, மக்களவையில் மணிப்பூர் குறித்து விவாதிக்க அனுமதி கேட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த அமளியில், அவை நடவடிக்கைகள் இன்று காலை 11 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டன.


முன்னதாக, நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நான் நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது" என்றார்.