மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று பூனே, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை, ரத்னகிரி, சடரா ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. மும்பையில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டாலும் இன்று காலை முதல் மழை சற்று குறைந்துள்ளது. மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவை எந்த பாதிப்புமின்றி இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில வழிதடங்களில் 10 முதல் 15 நிமிடம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின கிராமத்தின் பல வீடுகள் அமைந்துள்ள காலாபூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 21 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) இரண்டு குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், மும்பையில் இருந்து இரண்டு குழுக்கள் இந்த மீட்பு பணிகளில் இணைந்துள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு என்.டி.ஆர்.எஃப், நவி மும்பை தீயணைப்பு படை மற்றும் போலீசார் கால்நடையாக சென்றுள்ளனர். தீயணைப்பு படை வீரர் ஒருவர் அந்த இடத்திற்கு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக பால்கர் மற்றும் தானே ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புனே நிர்வாகம் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அம்பேகான், கெத், ஜுன்னார், போர், புரந்தர், முல்ஷி மற்றும் மாவல் தாலுகாக்களில் மொத்தம் 355 பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆறு முக்கிய ஆறுகளில், சாவித்ரி மற்றும் பாதல்கனகா, அபாயக் குறியைத் தாண்டியுள்ளது. அதேபோல் குண்டலிகா மற்றும் அம்பா ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது என்றும் காதி மற்றும் உல்லாஸ் எச்சரிக்கை குறிக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.ஆர்.எஃப் மகாராஷ்டிரா முழுவதும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ 12 குழுக்களை களமிறக்கியுள்ளது. மும்பையில் ஐந்து குழுக்களும், பால்கர், ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்லி, நாக்பூர் மற்றும் தானே ஆகிய இடங்களில் தலா ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.