ஓடும் ரயிலில் தன்னுடைய நாயுடன் அதன் உரிமையாளர் ஏற முயன்றுள்ளார். நாயை இழுத்துப் பிடித்து ரயிலில் ஏற்ற முயற்சித்தபோது, ரயிலின் சக்கரத்தின் கீழ் அந்த நாய் சிக்கியுள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த நாய் உயிர் பிழைத்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், பொறுப்பற்ற முறையில் ஓடும் ரயிலில் நாயை ஏற்ற முயற்சித்த உரிமையாளரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

ஓடும் ரயிலில் நாயுடன் ஏற முயன்ற நபர்:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. ரயில் கிளம்பும்போது, தன்னுடைய நாயுடன் அதன் உரிமையாளர் ஒருவர் ஏற முயற்சி செய்துள்ளார்.

Continues below advertisement

பொறுப்பற்ற முறையில் நாயை இழுத்துப்பிடித்து ஓடும் ரயிலில் ஏற்ற முயன்றார். ஆனால், நடைமேடைக்கும் ரயில் சக்கரத்திற்கும் இடையே இருக்கும் பகுதியில் நாய் சிக்கியது. ரயில் சக்கரம் நடுவே நாய் சிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

அதில், ரயில் வேகம் எடுத்தபோது நாய் அதன் அடியில் சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், நீல நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்த அந்த நபர், தனது கோல்டன் ரீட்ரீவர் நாயுடன் ஓடும் ரயிலின் அருகே நிற்பதைக் காணலாம்.

பரபர வீடியோ:

சில நொடிகளில், ரயில் கதவின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு தனது செல்லப்பிராணியை இழுத்துக்கொண்டு ரயிலில் ஏற முயற்சிக்கிறார். ரயில் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாய் போராடியது. ஆனால், கடைசியில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான ஆபத்தான இடைவெளியில் சிக்கியது.

ரயிலின் அடியில் சிக்கிய தன்னுடைய நாயை மீட்க முடியாமல் அதன் உரிமையாளர் செய்வதறியாமல் தவிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. நாய் உயிர் தப்பியதாகவும் நாய் உரிமையாளர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வைரலான இந்த காணொளி விலங்கு பிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளரின் பொறுப்பற்ற நடத்தையை பலர் கண்டித்து, இது ஒரு அலட்சியச் செயல் என்று கூறியுள்ளனர். விலங்கு கொடுமை தொடர்பான BNS பிரிவுகளின் கீழ் செல்லப்பிராணி உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.