Waqf Amendment Bill: புதிய வக்பு வாரிய மசோதாவால் இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
அனல் பறக்கும் மக்களவை:
கடும் எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 8 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை "அரசியலமைப்புக்கு முரணானது" என்று குறிப்பிட்டும், மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க ஒட்டுமொத்தமாக தீர்மானித்துள்ளன. அதேநேரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற, பாஜக முனைப்பு காட்டுகிறது. இந்நிலையில் இந்த ம்சோதாவில் உள்ள புதிய திருத்தங்கள் என்ன? கடும் எதிர்ப்புகள் ஏன்? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வக்பு என்றால் என்ன?
எளிமையான சொற்களில், வக்ஃபு என்பது இஸ்லாமியர்களால் பெரும்பாலும் சொத்து வடிவில் வழங்கப்படும் ஒரு தொண்டு அல்லது மத நன்கொடையாகும். இந்த நன்கொடைகளில் பெரும்பாலானவை முறையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன என கூறப்படுகிறது. இத்தகைய நன்கொடைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மசூதிகள், கல்லறைகள் மற்றும் மதரஸாக்கள் மற்றும் அனாதை இல்லங்களை பராமரிக்கவும் நிதியளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வக்புக்கு சொந்தமானது என ஒரு நிலம் மாற்றப்பட்டு விட்டால், எந்த சூழலிலும் எந்த காரணத்தினாலும் அதனை திரும்பப் பெற முடியாது.
வக்பு சொத்து விவரங்கள்:
கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையின்படி, வக்பு வாரியங்கள் தற்போது இந்தியா முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் சொத்துக்களைக் கட்டுப்படுத்துகின்றன. அதன் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சொத்து மதிப்பை கொண்டிருக்கும் வக்பு அமைப்பு இந்தியாவில் தான் உள்ளது. மேலும், ஆயுதப்படைகள் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்பு வாரியம் இந்தியாவில் மிகப்பெரிய நில உரிமையாளர் ஆகும்.
வக்பு மசோதா 2024ல் உள்ள திருத்தங்கள்:
வக்பு (திருத்த) மசோதா, 2024 இன் நோக்கம், வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக, 1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத்தை திருத்துவதாகும். திருத்த மசோதா இந்தியாவில் வக்பு சொத்துக்களின் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அதன்படி, இந்த மசோதா முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும், சட்டத்தின் மறுபெயரிடுதல், வக்பின் வரையறைகளைப் புதுப்பித்தல், பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்பு பதிவுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பது போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வக்பு வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்ச்சையை கிளப்பும் 5 விதிகள்:
- மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, உரிமை விதிகளில் மாற்றம் ஆகும். இதனால் வாரியத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதிகள், தர்காக்கள் மற்றும் கல்லறைகளைப் பாதிக்கும் என இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- முன்மொழியப்பட்ட மாற்றங்களில் வக்பு வாரியங்களின் அமைப்பில் மாற்றங்களும் அடங்கும். இதனால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் வக்பின் உறுப்பினர்களாகச் சேர்ப்பது கட்டாயமாகும்.
- வக்பு வாரியங்கள்பிரச்னைக்கு உரிய சொத்துக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் ஆராய்ந்து சொத்தின் மீதான வக்பு உரிமைகோரல் செல்லுபடியாகுமா என்பதை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பார்கள். ( சர்ச்சைக்குரிய வழக்குகளில் ஒரு அரசு அதிகாரி ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பளிக்க மாட்டார் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன
- சட்டம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் வக்பு வாரியத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் ஒரு போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது.
- 'பயன்பாட்டு உரிமையால் வக்பு சொத்து' என்ற பிரிவை நீக்குவது ஐந்தாவது விதியாகும். இந்த பிரிவின்படி, ஒரு சொத்து நீண்ட காலத்திற்கு மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் - முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அதை வக்பு சொத்து என்று கருதலாம். இருப்பினும் தெலுங்கு தேசம் கட்சியின் பரிந்துரையின் பேரில், இந்தக் குறிப்பிட்ட விதியை கடந்த கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமை பறிப்பு?
புதிய மசோதா பிரச்னைகளை நிவர்த்தி செய்வதற்கு மாறாக வக்பு சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதில், இஸ்லாமியர்களின் பங்கைக் கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சிகள் இந்த மாற்றங்களுக்கு எதிராக உள்ளன. AIMIM நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, இந்த மாற்றங்கள் இஸ்லாமியர்களின் நிலத்தைப் பறிக்கும் நோக்கம் கொண்டவை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மசோதா முதலில் ஆகஸ்ட் 2024 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மசோதா நாடாளுமன்ற கூட்டுk குழுவிற்கு (ஜேபிசி) அனுப்பப்பட்டது. குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அசல் மசோதாவில் சில மாற்றங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது. ஆனால், குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை என குற்றச்சாட்டு நிலவுகிறது.