திட்டமிட்டதை விடவும் 6 நாட்கள் முன்கூட்டியே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29ஆம் தேதிவரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்றுடன் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மக்களவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டநிலையில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரம் முன்னதாக இன்று காலை அதாவது டிசம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஒத்திவைக்கப்பட்டன. டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 29ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  மக்களவைத் தலைவர் தலைமையில், அரசு மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற ஒத்திவைப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவை ஒத்திவைத்த துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட சிறுதானிய விருந்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கிடையில், லோக்சபா மொத்தம் 62 மணி 42 நிமிடங்கள் 13 அமர்வுகளை நடத்தி 97 சதவீதம் திட்டமிட்டபடி அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய குளிர்காலக் கூட்டத் தொடரில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்த சூடான விவாதங்கள் நடந்தன, குறிப்பாக தேசிய பாதுகப்பு குறித்து எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாததால் மத்திய அரசை எதிர்த்து கண்டனங்களை தெரிவித்தன. இந்த குளிர்கால கூட்டத்தொடரின் 13 அமர்வில் அரசியலமைப்பு அட்டவணை பழங்குடியினர் (ஆணை) 1950 இல் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா2021, எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா2022 மற்றும் கடல்சார் திருட்டு எதிர்ப்பு மசோதா 2019 ஆகியவை நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.