குளிர் காலம் அதன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


இன்று (டிச.23) காலை 9 டிகிரி செல்சியல் வெப்பநிலைக்குச் சென்று குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை வேலைக்குச் செல்வோருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வழக்கமாக ஆண்டுதோறும் இத்தகைய காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நேற்று (டிச.22) மாலை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






நேற்று (டிச.22) காலை டெல்லி உள்ளிட்ட கங்கை சமவெளிப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நள்ளிரவு தொடங்கி டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 20 ரயில்கள் தாமதாகமாக இயக்கப்படுவதாக அப்பகுதி ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.


இந்து கங்கை மண்டலத்தில் (Indo Gangetic Plain) உள்ள பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரும் நாள்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்படலாம் என முன்னதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


நேற்று காலை ராஜஸ்தானில் ஓரிரு இடங்களில் அடர்ந்த மூடுபனியுடன் வானிலை வறண்டு காணப்பட்டது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரிக்கு கீழ் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஹரியானாவில் உள்ள அம்பாலா, ஹிசார் பகுதிகளிலும், பஞ்சாபில், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதான்கோட், அடம்பூர், ஹல்வாரா, பதிண்டா மற்றும் ஃபரித்கோட் ஆகிய இடங்களில் இதேபோன்ற சண்டிகரிலும் காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.