உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கார், அதனோடு தொடர்புடைய மற்ற வழக்கு ஒன்றில் விடுதலை செய்யப்பட்டார்.  


கடந்த 2017ம் ஆண்டு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை உன்னாவ் வன்புணர்வு வழக்கு (Unnao rape case) ஈர்த்தது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அம்மாநில சட்ட மன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான குல்தீப் சிங் செங்கர் இதில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.    


 



குல்தீப் சிங் செங்கார் - முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்


உன்னாவ் விபத்து வழக்கு:  லக்னோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில்,பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரியால் மோதப்பட்டு விபத்துக்குள்ளானார். இந்த கோர விபத்தில், உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இருப்பினும், வழக்கில் தொடர்புடைய  இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். 




 


இந்த ‘விபத்து’ பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்தப்பட்ட சதி செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு  செய்தனர்.


இந்த விபத்து சம்பத்துவத்துக்குப் பிறகு, உயிர் பிழைத்த இளம்பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறை உள்ளிட்ட 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.   


வழக்கில் விசாரணை முடிவடைந்து தில்லி நீதிமன்றம் 16 திசம்பர் , 2019 இல் தீர்ப்பளித்துள்ளது.  பாலியல் வல்லுறவு வழக்கில் குல்தீப் சிங் செங்கர் - ஐ குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்தது.  அப்பெண்ணின் தந்தை மரணமடைந்த மற்றொரு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 


இன்று தீர்ப்பு:  


இந்நிலையில், உன்னாவ் இளம்பெண் விபத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட செங்கார், ஞானேந்திரா சிங், கோமல் சிங், அர்ஜுன் சிங், அவதேஷ் சிங் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்தது. குற்றங்களை நிருபீக்க தகுந்த ஆதாரங்களும் இல்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.