நீதிபதிகள் சம்பளச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று அறிமுகப்படுத்துகிறார். 


உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1954 மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1958 ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். 


வரும் நாட்களில் மேலும் இரண்டு உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று மக்களவையில் நேற்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 


தடுப்பூசிகள் குறித்து குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இரண்டு புதிய தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்ட சோதனை தரவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  “மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளின் சோதனை வெற்றியடையும் என நம்புகிறேன். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்கள். ஆராய்ச்சியும் உற்பத்தியும் இந்தியாவிலேயே செய்யப்பட்டுள்ளன.





கடந்த 9 மாதங்களாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 


இதனிடையே நேற்று, நாகலாந்து தாக்குதல் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கை குறித்து பேச எதிர்க்கட்சிகள் நேரம் கோரினர். ஆனால் சபாநாயகர் நேரம் கொடுக்க அனுமதி மறுத்து விட்டார். இதற்கிடையில், பாஜக தனது நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்திற்குப் பதிலாக அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று  நடத்தவுள்ளது.


முன்னதாக, உலகம் முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால், 3ஆம் தவணை கொரோனா தடுப்பூசி தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 


ஒமைக்ரான் வைரஸ் குறித்து சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.  அதில், “புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். குறிப்பாக இந்த வைரஸை எதிர்ப்பதில் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 3ஆம் தவணை தடுப்பூசி தேவையா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும். ஒமைக்ரான் வைரஸை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்து, பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.