மாநிலங்களவையில் 12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டத்தை திரும்ப பெறாவிட்டால் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
மாநிலங்களவையில் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நேற்று தாக்கல் செய்தார்.
குரல் வாக்கு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேரையும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு பேரையும், சிபிஐ சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரையும், சஸ்பெண்ட் செய்வதற்கான உத்தரவை அவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் பிறப்பித்தார். நடப்பு கூட்டத் தொடரில், முந்தையக் கூட்டத்தொடர் அடிப்படையில் உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதையொட்டி, அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உத்தரவை திரும்பப்பெறா விட்டால், அவை நடவடிக்கைகளை முழுவதையும் புறக்கணிக்கும் நெருக்கடியான சூழலுக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்படும். ஆனால், முற்றிலும் புறக்கணிப்பு செய்வது அரசுக்கு சாதகமாகவே அமையும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருதுகின்றனர். அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், அரசுடன் விவாதிக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை சீர்திருத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
முன்னதாக, முந்தைய கூட்டத் தொடரின் கடைசி நாளில் இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்ட 20 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு ஒழுங்குக் கட்டுப்பாட்டுக் குழுவை அமைக்கப்படு வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த சிறப்பு ஒழுங்குக் குழுவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், மசோதா மீது விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றுவதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார். பிற்பகல், மாநிலங்களவையில் இம்மசோதாவை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.
இம்மசோதா மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இம்மசோதாவை வரவேற்தாக கூறினார். இருப்பினும், ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு இம்மசோதாவை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட வேளாண் அமைச்சர், விவசாயிகளின் நலன் கருதியே இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும். ஆனால் எதிர்க்கட்சியினர் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். குருநானக் ஜெயந்தி அன்று பிரதமர் முழுமனதோடு இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்