நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடிய நிலையில் பழைய நாடாளுமன்றம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பல விஷயங்களை குறிப்பிட்டார். 


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. மீதமுள்ள 4 நாட்களும் சமீபத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற அவையில் நடைபெற உள்ளது. 


இன்றைய முதல் நாளில் அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, ’இந்த நாடாளுமன்றம் குறித்து பல நினைவுகள் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம்.பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறது. புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பு பழைய நாடாளுமன்றத்தில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும்.  


600-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.பிக்களாகியுள்ளனர். 25 வயதி எம்.பியாக இங்கு வந்த திரவுபதி முர்மு தற்போது நாட்டின் குடியரசு தலைவராகியுள்ளார்.  தேநீர் விற்ற நான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த இடத்தை வந்தடைந்தது தான்  ஜனநாயகத்தின் சக்தி. கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற பணிகள் பாதிக்கப்படா வண்ணாம் செயலாற்றினோம்” என தெரிவித்தார். 


மேலும், இந்தியாவின் பெருமையை உலகமே பேசி வருகிறது. ஜி 20 மாநாட்டின் மூலம் இந்தியாவின் மீதான எதிர்மறை எண்ணங்கள் விலகி உள்ளன. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு ஜி 20 மாநாடு பதில் அளித்துள்ளது. ஜி 20 மாநாட்டு வெற்றி என்பது எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சி சார்ந்த வெற்றி அல்ல. ஜி 20 மாநாட்டின் வெற்றி இந்திய மக்களின் வெற்றி எனவும் மோடி பேசினார். 


தொடர்ந்து புதிய நாடாளுமன்றம் பற்றி பேசிய அவர், ’இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது நாட்டின் பன்முகத் தன்மையை காட்டுகிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்.  நாடாளுமன்றத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் வரும்போது விழுந்து வணங்கிய பிறகே உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு இந்தியரின் வியர்வையும், பணமும் தான் புதிய நாடாளுமன்ற கட்டடமாக உருவெடுத்துள்ளது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.




மேலும் படிக்க: Parliament Special Session LIVE: பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடைகொடுக்கும் நேரம் இது - பிரதமர் மோடி உரை