Parliament Special Session LIVE: பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடப்பது ஏமாற்று வேலை என பெரியார் கூறியிருந்தார் - கனிமொழி எம்.பி
Parliament Special Session 2023 LIVE: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் காணலாம்
பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடப்பது ஏமாற்று வேலை என பெரியார் கூறியிருந்தார் - கனிமொழி எம்.பி
Womens Reservation Bill : மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜக அரசியலாக பார்க்கிறது - கனிமொழி எம்.பி
Womens Reservation Bill : இந்தியாவில் முதல்முறையாக நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது - கனிமொழி எம்.பி
Womens Reservation Bill : கனிமொழி எம்.பி பேசத்தொடங்குவதற்கு முன்பே பாகவினர் கூச்சல்
Womens Reservation Bill : கனிமொழி எம்.பி பேசத்தொடங்குவதற்கு முன்பே பாகவினர் கூச்சல்
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறோம் - சோனியா காந்தி
புதிய நாடாளுமன்றத்திற்கு சம்விதான் சதன் என பெயரிடப்பட்டுள்ளாதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்படுள்ளது. இதன் மூலம் மகளிருக்கு நாடாளுமன்ற மக்களவையில் 33% இட ஒதுக்கீடு செய்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
மகளிர் மேம்பாடு என பேசிக்கொண்டிருப்பதை விட அதை செயல்படுத்த வேண்டியது அவசியம். விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மகளிருக்கான இடஒதுக்கீடு இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் - மோடி
நாடாளுமன்ற வரலாற்று நிகழ்வுகளை அறிய புதிய கட்டடத்தில் டிஜிட்டல் புத்தகம் இடம்பெற்றுள்ளது - மோடி
சுதந்திரத்தின் அடையாளமாக தமிழ்நாட்டிலிருந்து நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. அது தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் அடையாளம். வளமான எதிர்காலம் தொடங்கியுள்ளது - மோடி
உலகமே வியக்கும் வகையில் ஜி20 மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறோம். சந்திரயான் 3 திட்டம் வியத்தகு வெற்றியை பெற்றுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். புதிய சிந்தனைகளுடன் இந்தியா முன்னேறிச் செல்கிறது - மோடி
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது, அவையின் நடவடிக்கைகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தார் பிரதமர் மோடி. வந்தே மாதரம் என முழங்கியபடி அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பிக்களும் உள்ளே சென்றனர்
பழைய நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டுக் கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சென்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணைக்குடியரசுதலைவர் ஜெகதீப் தன்கர், ”இந்த முக்கியமான தருணத்தில், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வாசலில் நிற்கும் இந்த தருணத்தில், நமது அற்புதமான எழுச்சிக்கு உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடைகொடுத்து புதிய கட்டடத்திற்கு செல்லும்போது இந்த வரலாற்றை காண வாய்ப்பு பெற்ற அனைவரும் பாக்கியம் பெற்றவர்கள்” என கூறினார்
பழைய நாடாளுமன்ற கட்டடத்தை இனி ”இந்திய அரசியலமைப்பு மையம்” என அழைக்கலாம் என்று பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், நடக்கும் ஒவ்வொரு விவாதமும், வழங்கும் ஒவ்வொரு சமிக்ஞையும் இந்திய அபிலாஷையை ஊக்குவிக்க வேண்டும். இதுவே நமது பொறுப்பு. இங்கு என்ன சீர்திருத்தங்கள் செய்தாலும், இந்திய லட்சியம் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். சிறிய கேன்வாஸில் யாராலும் பெரிய படத்தை எடுக்க முடியுமா? எப்படி ஒரு சிறிய கேன்வாஸில் பெரிய படத்தை எடுக்க முடியாதோ, அதேபோல், நமது சிந்தனையின் கேன்வாஸை நம்மால் பெரிதாக்க முடியவில்லை என்றால், ஒரு மாபெரும் இந்தியாவை நம்மால் வரைய முடியாது - மோடி
இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள், அது உலகளவில் பாராட்டப்படுகிறது. கடந்த 1000 ஆண்டுகளில் இந்தியா இன்று இருப்பது போல் சிறப்பாக இல்லை.இந்தியாவின் வங்கித் துறை தானே செழித்து வருகிறது மோடி
பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370வது சட்டப்பிரிவு இந்த நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம் - மோடி
இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம், ஆனால் இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்பதில் உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. இன்று, பாரதம் 5வது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நகர்கிறது - பிரதமர் மோடி
பெண்களுக்கு அதிகாரமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் முனைப்புடன் புதிய கட்டடத்திற்கு செல்கிறோம் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், ”இந்த கட்டிடம் மற்றும் அதுவும் இந்த மைய மண்டபம் நம் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. 1952 முதல், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகளின் தலைவர்கள் இந்த மத்திய மண்டபத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியுள்ளனர். நமது குடியரசுத் தலைவர்கள் சுமார் 86 முறை இங்கு உரையாற்றியுள்ளனர்” எனவும் மோடி கூறினார்
”பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தான் இந்தியக் கொடியும் தேசிய கீதமும் உருவானது. இரு அவைகளின் உறுப்பினர்களும் பல வரலாற்று முடிவுகளை எடுத்த இடம் இது. ஷாஹா பானோவின் முத்தலாக் வழக்கு, திருநங்கைகள் மசோதா மற்றும் 370வது பிரிவு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன” என பிரதமர் மோடி பேசினார்.
இது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம் என பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மோடி பேசியுள்ளார். அதோடு, பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் 4000 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ”விநாயகர் சதுர்த்தி நாளான இன்று புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும். பழைய நாடாளுமன்றத்தில் தான் இந்தியா அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டது” என பேசினார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின், மத்திய மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, இன்றே தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் முதல் மசோதாவாக இதுதான் இருக்கும் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குழுவாக இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுமார் 750 எம்.பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதனிடயே, குழு புகைப்படத்தின் போது பாஜக எம்.பி., நர்ஹாரி மயங்கி விழுந்தார்.
ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்ற பின், பா.ஜ., தலைவரும், எம்.பி.யுமான, தினேஷ் சர்மா பேசியதாவது, “இது எனக்கு ஒரு வாய்ப்பு. நானும் பழைய பொறுப்புகளை விட்டுவிட்டு புதிய பொறுப்புக்கு வருகிறேன். இப்போது பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைய உள்ளோம்.. இது இரண்டும் தற்செயலாக நடக்கிறது. நான் மட்டும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டேன், இந்த (பழைய) பாராளுமன்றத்தின் கடைசி நாள்... இன்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது, நாளையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கும் என்று கூறுவேன்” என தெரிவித்தார்.
பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுகவை தொடர்ந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும், பழைய நாடாளுமன்றம் தொடர்பான தங்களது நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்
”தமிழ்நாடு, மணிப்பூர் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. ஆர்டிகள் 370-ஐ ரத்து செய்தது ஏற்கனவே உள்ள புண்ணின் மீது உப்பை கொட்டுவது போன்றது” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பேசினார்.
நாடாளுமன்றத்தின் ஆரம்ப கால வரலாறு தொடங்கி தனது ஆட்சி காலம் வரையிலான பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு, சுமார் ஒரு மணி நேரம் பேசி பிரதமர் மோடி தனது உரையை பூர்த்தி செய்தார். இதில் பல இடங்களில் காங்கிரஸை, பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. ஆந்திரா இரண்டாக பிரிந்த போது, அதனை அந்த மாநில மக்களால் கொண்டாட முடியவில்லை.
”நேரு முதல் மன்மோகன் சிங் வரை பிரதமராக இருந்த தலைவர்கள் அனைவரும் தங்களது கடமையை ஆற்றினர். இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்தவர் அம்பேத்கர். பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகித்தவர் லால் பகதூர் சாஸ்திரி. இதே அவையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவும் இதே கட்டடத்தில் தான் எடுக்கப்பட்டது” என பிரதமர் மோடி பேசினார்
தனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஆர்டிகள் 370 ரத்து, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது போன்ற திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிட்டார்
தீவிரவாத தாக்குதலையும் தாண்டி இந்த கட்டடம் நிலைத்து நிற்கிறது. பல தடைகளை கடந்து நாம் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின், நாட்டின் வெற்றி குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர்; ஆனால் இந்த நாடாளுமன்றம் அவர்களை தவறு என நிரூபித்தது - மோடி
”உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு பழைய நாடாளுமன்றம் கட்டடம் சாட்சியாக உள்ளது. நாடாளுமன்றம் மீதான தாக்குதலை நாடு ஒருபோதும் மறக்காது. நாடாளுமன்ற கட்டடத்தை பாதுகாகக உடலில் குண்டு தாங்கிய அனைவருக்கு தலை வணங்குகிறேன். நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் எனது பணிவான வணக்கங்கள்” என பேசினார்.
”கடந்த 75 ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் வைத்துள்ள அந்த நம்பிக்கை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேரு, மன்மோகன் சிங் மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சர்தார் படேல் போன்ற நாயகர்களை நினைவு கூற வேண்டிய நேரமிது” என மோடி பேசியுள்ளார்
”600-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.பிக்களாகியுள்ளனர். 25 வயதி எம்.பியாக இங்கு வந்த திரவுபதி முர்மு தற்போது நாட்டின் குடியரசு தலைவராகியுள்ளார். தேநீர் விற்ற நான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த இடத்தை வந்தடைந்தது தான் ஜனநாயகத்தின் சக்தி. கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற பணிகள் பாதிக்கப்படா வண்ணாம் செயலாற்றினோம்” என்றார் பிரதமர் மோடி
”இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது நாட்டின் பன்முகத் தன்மையை காட்டுகிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். நாடாளுமன்றத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் வரும்போது விழுந்து வணங்கிய பிறகே உள்ளே நுழைந்தேன்” என மோடி கூறினார்.
”இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை சேர்த்தது சாதனையாகும். ஜி20 மாநாட்டின் வெற்றி எந்தவொரு தனிநபரையோ, கட்சியையோ சார்ந்தது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானது. பல உணர்வூப்பூர்வமான நினைவுகளுடன் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது” என பேசினார்.
”பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறது. புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பு பழைய நாடாளுமன்றத்தில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும். சந்திரயான் 3ன் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்கிறது. ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது இந்தியாவின் வெற்றி ஆகும். இந்த மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது” என பிரதமர் மோடி பேசினார்
சிறப்பு கூட்டத்தொடரில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு இந்தியரின் வியர்வையும், பணமும் தான் புதிய நாடாளுமன்ற கட்டடமாக உருவெடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம். இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது”
மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமான இணைப்பு பாலமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது எனவும் ஓம் பிர்லா பாராட்டினார்.
கூட்டத்தொடர் தொடங்கியதும் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மாற்றத்திற்கான முக்கிய முடிவுகள் ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்டன. இந்த மாநாட்டால் இந்தியாவின் புகழ் உலக அரங்கில் மேலும் உயர்ந்துள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்” என பேசினார்.
இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், தேசிய கீதத்துடன் தொடங்கியது. மக்களவக்கு பிரதமர் மோடியும் தந்துள்ளார். கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
ஒருவரது வாழ்க்கையில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நிரப்பும் தருணங்கள் சில இருக்கும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் இந்த குறுகிய அமர்வை நான் அப்படி தான் பார்க்கிறேன் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்ற எதிர்க்கட்சியினரின் இந்தியா கூட்டணி முடிவு - மக்கள் பிரச்சினைகளை கூட்டத்தொடரில் எழுப்ப முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் முதல் நாளில் கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து சிறப்பு விவாதம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
இன்று தொடங்கி அடுத்த 5 நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்:
ஒட்டுமொத்த நாட்டிற்கான சட்டங்களை வகுக்கும் இடமாக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகள் உள்ளன. இங்கு மக்கள் பிரச்னை குறித்து விவாதித்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் சட்டமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம்.
சிறப்பு கூட்டத்தொடர்:
இந்நிலையில் தான் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பின்பு இது வழக்கமான கூட்டத் தொடர் தான் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நோக்கம் என்பது தொடர்பாகவும், நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், பொதுமக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன. என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டன. தேர்தலை மையமாக கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நிரல்:
தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவின் விடுதலைக்குப் பின் அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து முதல் நாளில் சிறப்பு விவாதம் நடைபெறும். அதனை தொடர்ந்து, ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதோடு, ஏற்கனாவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா மற்றும் அஞ்சல் அலுவலக மசோதா ஆகியவையும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசின் உண்மையான திட்டம்?
மேற்குறிப்பிடப்பட்ட மசோதாக்கள் மட்டுமின்றி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேலும் சில புதிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், நாட்டின் பெயரை இந்தியா என்பதில் இருந்து பாரதம் என மாற்றுவது மற்றும் மக்களவையிலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது போன்ற மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கண்ட மசோதாக்களை வாக்கு வங்கிக்கான அஸ்திரங்களாக மத்திய அரசு பயன்படுத்தும் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் என்பதே கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் திட்டம்:
சனாதன தர்மத்துக்கு எதிரான சில எதிர்க்கட்சி பிரமுகர்களின் பேச்சுகள் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பின. அதற்கு பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்தார். சிறப்பு கூட்டத்தொடரிலும் இந்த சர்ச்சை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் பாரதம் என பெயர் மாற்றும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம், சீனா அத்துமீறல் ஆகிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் பாஜகவின் தேர்தல் சின்னமான 'தாமரை' படம் இடம்பெற்று இருப்பதற்கும், எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -