நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசத்தொடங்கியதும் எதிக்கட்சிகளின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் ரணகளமாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.
பிரதமர் மோடி பேசத்தொடங்கியதும் பாஜக எம்.பிக்கள் மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டுனர்.
இதற்கு மத்தியில் பேசிய மோடி, “தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள். வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது குறித்து குடியரசுத்தலைவர் உரையாற்றினார். எங்களின் பத்தாண்டு சாதனையை பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் எப்படி திறம்பட பணியாற்றினோம் என்பது மக்களுக்கு தெரியும். 3வது முறையாக சேவையாற்ற மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவது கண்கூடாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. ஏழைகளில் நலனுக்காக நாங்கள் பணியாற்றியுள்ளதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்” எனப்பேசினார்.
பிரதமர் மோடி பேச பேச எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளுக்கு கண்டனத்தை தெரிவித்தார். ஆனாலும் அமளி தொடர்ந்து வருகிறது. மேலும் மணிப்பூர் விவாகாரத்திற்காக நீதி வேண்டும் என எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே நீட் தேர்வு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.