18ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3ஆம் தேதி வரை, கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டம்: முதல் அமர்வில் புதிதாக தேர்வாகியுள்ள எம்பிகள் பதவியேற்க உள்ளனர். அதோடு, மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும் குடியரசு தலைவர் உரை இடம்பெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பின்னர், விவாதங்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் 264ஆவது மாநிலங்களவை அமர்வு, ஜூலை 3ஆம் தேதியுடம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் அசுர பலத்துடன் இருக்கின்றன. நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
அசுர பலத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள்: ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். அதே சமயத்தில் இந்தியா கூட்டணிக்கு 234 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் பாஜகவை தவிர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 எம்பிக்களுடனும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 எம்பிக்களுடனும் உள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 எம்பிக்களுடனும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பரிஷத் 5 எம்பிக்களுடன் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணியில் 99 எம்பிக்களுடன் காங்கிரஸ் கட்சியும் 37 எம்பிக்களுடன் சமாஜ்வாதி கட்சியும் 29 எம்பிக்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 22 எம்பிக்களுடன் திமுகவும் 9 எம்பிக்களுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் 8 எம்பிக்களுடன் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதால் ஆளும் கூட்டணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். விவாதங்கள் இன்றி முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு சூழல் நிலவுகிறது. எனவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.