Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் உட்பட, 24 பேர் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா:


சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றார். கன்னாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு மாநில ஆளுநர் பதவிபிரமாணம் செய்துவைத்தார். 28 வயதில் எம்.எல்.ஏவான சந்திரபாபு நாயுடு, 30 வயதில் அமைச்சர் பதவியை பெற்றார். 45 வயதில் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, தனது 74வது வயதில் நான்காவது முறையாக இன்று ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் 24 பேர் அமைச்சர்களாகர் பதவியேற்றனர். அதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 20 பேர், ஜனசேனா கட்சியை சேர்ந்த 3 பேர் மற்றும் பாஜகவச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். 






பதவியேற்பு விழாவில் விவிஐபிக்கள்:


சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். அதோடு, 


மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, ராம் மோகன் நாயுடு, ஜிதன் ராம் மஞ்சி, கிஷன் ரெட்டி மற்றும் சிராக் பஸ்வான் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதோடு, பல மத்திய இணையமைச்சர்களும் விழாவில் பங்கேற்றனர். ஓபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன்,  ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


அமைச்சரானார் பவன் கல்யாண்:


தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு 21 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்படி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே அந்த தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கட்சி தொடங்கி 10 ஆண்டுகால கடும் முயற்சிக்குப் பிறகு, பவன் இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக பவன் கல்யாணிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. அமைச்சராகவும் பொறுப்பேற்று நிலையில், அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.


ஆந்திராவின் புதிய அமைச்சர்கள் பட்டியல்:


தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், நாரா லோகேஷ், அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர், கொள்ளு ரவீந்திரா, வாங்கலபுடி அனிதா, பி. நாராயணா, நிம்மலா ராமாநாயுடு, பையாவுலா கேசவ், சத்யகுமார் யாதவ், என்எம்டி பரூக், ஆனம் ரமணராய ரெட்டி, தோலா பால வீராங்கனைசுவாமி, அங்கானி சத்தியபிரசாத், கொலுசு பார்த்தசாரதி, கோட்டிபட்டி ரவி, கந்துல துர்கேஷ், டிஜி பாரத், பிசி ஜனார்தன் ரெட்டி, லெட்டி சுபாஷ், கொண்டபல்லி ஸ்ரீநிவாஸ், எஸ். ஆந்திராவில் புதிய அமைச்சர்களாக மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி பதவியேற்றார். பல்வேறு சமூகங்களுக்கும் உள்ளடக்கிய வகையில் இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.


அபார வெற்றி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 164 இடங்களை கைப்பற்றியது. அதிலும் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை கைப்பற்றியது. ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, பல இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.