நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையாக அவையை நடத்த ஒத்துழைக்கும் வரை இனி நாடாளுமன்ற அவைக்கு வரப்போவதில்லை என சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக அறிவித்துள்ளார்.


நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக மணிப்பூர் கலவரத்தின் போது குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைத்ளங்களில் வைரலாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தொடந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, நிறைவேற்றப்பட இருந்த மசோதாக்களும் தொடர் அமளியால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான அமர்வுகள் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் அமளியால் தொடர்ந்து இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 


ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அமளியால் கடுப்பான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை மாண்பை காக்கும் வகையில் ஒழுக்கத்தோடு நடந்துகொண்டால் மட்டுமே இனி தான் சபாநாயகர் இருக்கையில் அமர்வேன் என்றும் அது வரை அவைக்கு வரமாட்டேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தின் போதும் ஓம் பிர்லா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அமளியால் சபாநாயகர் அவைக்கே வரமாட்டேன் என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.