Haryana Clashes: ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால்  அம்மாநில போலீசார் 116 பேரை கைது செய்துள்ளனர்.



வடகிழக்கு இந்தியாவும், வட இந்தியாவும் கலவர பூமியாக மாறி வருகிறது. முதலில், மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து, கொடூர சம்பவங்கள் அரங்கேறியது. இன்னும் அங்கு நிலைமை கட்டுக்குள் வராத நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் மூன்று நாட்களாக கலவரம் நீடித்து வருகிறது.  


ஹரியானா கலவரம்:


ஹரியானாவின் முக்கிய நகரமான குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பிரம்மாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணி கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பினருக்கும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாற அதைக்கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர்புகைக்குண்டு வீசினர்.  மேலும், கடைகள், வீடுகள், வழிபாட்டு தளங்களை தீ வைப்பு எரித்ததோடு, மசூதி இமாமை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதனால், மேலும் பதற்றம் அதிகரித்து இந்த கலவரம் குர்கான், பல்வால், பரிதாபாத் என பல மாவட்டங்களுக்கு பரவியது.


116 பேர் கைது:




இதனால், ஒட்டுமொத்த ஹரியானாவும் பதற்றமான சூழலுக்கு ஆளானது. இதையடுத்து, பல பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கொடூர வன்முறை சம்பவத்தின் காரணமாக இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 116 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.


உச்சக்கட்ட அலர்ட்டில் தலைநகர்: 


ஹரியாவின் நுஹ் மற்றும் குருகிராமில் நடந்த வன்முறையை கண்டித்து விஸ்வ ஹிந்த பரிஷத மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இன்று டெல்லியில் பல இடங்களில் போராட்டங்களை நடந்தினர். இதனால் நகரின் பல பகுதிகிளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறை தேசிய தலைநகர் டெல்லியில் பரவாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  டெல்லியன் பல பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  எல்லையோர பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.