நாட்டில் பண வீக்கம் மிக அதிகமாக இருக்கிறது என்றும் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால், நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள் எனவும் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நேற்று (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மோடி அரசாங்கத்தின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட் இதுவாகும். இதில் முக்கியமான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இன்று (ஜூலை 24) நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. எதிர்க் கட்சிகள் பட்ஜெட் குறித்து விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:


’’நாட்டில் பண வீக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் கிராமங்களுக்குச் சென்றால், பண வீக்கத்தின் பாதிப்பை உணர முடியும். பண வீக்கப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால், நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள். ஏற்கெனவே இடைத்தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டியுள்ளன.


பண வீக்க பாதிப்பு நிதி அமைச்சருக்குத் தெரியவில்லை


பண வீக்க பாதிப்பு நிதி அமைச்சருக்குத் தெரியவில்லை. அதனால்தான் அவர் பட்ஜெட் தாக்கலின்போது, 10 வார்த்தைகளில் பண வீக்கம் குறித்துப் பேசிவிட்டுச் சென்றார். நாட்டில் வேலைவாய்ப்பில் பிரச்சினை நிலவுவதை அரசு அறியவில்லை 


பிஹார், ஆந்திரப் பிரதேசம் குறித்து எத்தனை முறை குறிப்பிட்டீர்கள்? ஆனால் தமிழ்நாடு குறித்து ஏன் பேசவில்லை? தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்கள் குறித்து ஏன் பேசவில்லை?


அக்னிபாத் திட்டம், நீட் தேர்வை ரத்து செய்க


5 கோரிக்கைகளை மத்திய அரசுக்கும் மத்திய நிதி அமைச்சருக்கும் முன் வைக்கிறேன். இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.



  1. மாதத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.400 ஊதியத்தை ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

  2. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

  3. மார்ச் 31, 2024 வரை பெறப்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

  4. அக்னிபாத், அக்னிவீர் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

  5. இறுதியாக நீட் தேர்வு முழுமையாக நீக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் எதிரொலிக்கும்’’.


இவ்வாறு விவாதத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.